உலகில் பிரசித்திப் பெற்ற விநாயகர் கோவில்கள் பல உள்ளன. ஏராளமான பக்தர்கள் தினசரி வழிபாடு செய்யும் கோவிலாக இவை உள்ளன. இவற்றில் முக்கியமான சில கோவில்களைப் பார்க்கலாம்.
மணக்குள விநாயகர்

புதுச்சேரியில் அமைந்துள்ளது மணக்குள விநாயகர் கோவில். விநாயகர் கிணற்றின் மேல் அமர்ந்துள்ளார். இது கிணறு அல்லது குளம் என்று அழைக்கப்படுகிறது. உலகில் ஒரு தெய்வம் அதன் தீர்த்தக் குளத்தின் மீது அமர்ந்திருப்பது இந்தக் கோவிலில் தான்.
இந்த விநாயகர் அமர்ந்திருக்கும் பீடத்தின் இடது ஓரம் அரை அடி விட்டத்தில் ஒரு குழி செல்கிறது. இதன் ஆழம் எதுவரை என்று கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் அதிசயம் என்னவென்றால் இந்தக்குழியில் எப்போதுமே நீர் இருக்கிறது.
உச்சிப்பிள்ளையார் கோவில்
உலகில் வேறெந்தப் பிள்ளையாரும் மலை உச்சியில் அமர்ந்து இருக்கவில்லை. அப்படியே இருந்தாலும் இந்த அளவுக்கு பிரபலமான கோவில் வேறு எங்கும் இல்லை. இந்தக்கோவில் அமைந்திருக்கும் உயரம் 275 அடி. மலைக்கோவிலுக்குச் செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. இங்கு ஆயிரம் கால் மண்டபம் இருக்கிறது.
இந்தப் பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுகின்றனர். பாலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. உலகில் மிகப்பெரிய கொழுக்கட்டை இந்தக்கோவிலில் தான் பிள்ளையார் சதுர்த்திக்கு படைக்கிறார்கள். இது திருச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
பல்லவர் காலத்தில் உருவான இந்தக்கோவில் 1600 ஆண்டுகள் பழைமையானது. உலகின் மிகப்பழைமையான பிள்ளையார் கோவில் இது தான். இந்தியாவில் இருக்கும் ஒரே குடைவரைக் கோவில். அதுவும் பிள்ளையாருக்கென்றே இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது.
கற்பக விநாயகர் கோவில்

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில் கற்பகவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு பிள்ளையார் சதுர்த்தியின்போதும் விநாயகர் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வருவார்.
இந்தக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் கலை நிகழ்ச்சிகள் அன்னதானம் என மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். தமிழகத்தின் பல இடங்களில் இருந்து பக்தர்கள் குவிந்து விடுவார்கள்.
ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர்

கோவை மாவட்டத்தில் அமைந்திருக்கும் புளிய குளம் விநாயகர் கோவில் உலகளவில் பிரசித்திப் பெற்றது. இங்குள்ள விநாயகர் தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர்.
1982ல் இந்தக் கோவில் திறக்கப்பட்டது. இந்த கோவிலில் வீற்றிருக்கும் பிள்ளையார் சிலையின் உயரம் 19 அடி. சுமார் 190 டன் எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செண்பக விநாயகர் கோவில்

இது சிஙகப்பூரில் கடற்கரை ஒட்டிய காத்தோன் என்ற இடத்தில் அமைந்துள்ளது. கோவிலில் மூலவராக விநாயகரும் வலது பக்கம் சிவலிங்கமும், இடது பக்கம் மனோன்மணி அம்மையும் இருக்கிறார்கள். ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் இருக்கிறார். திருச்சபை மண்டபத்தில் நடராஜரும், சிவகாமி அம்மையாரும் இருக்கிறார்கள்.
பைரவர், பஞ்சமுக விநாயகரும் இருக்கிறார்கள். ராஜகோபுரத்தில் சிவன், முருகன், விஷ்ணு, பிரம்மா என 159 சிலைகள் இடம்பெற்றுள்ளன. இது 1800ம் ஆண்டின் இறுதியில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்பகுதியில் இருந்த நீர்த்தேக்கத்தில் விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது. அந்த சிலையை செண்பக மரத்தின் அடியில் வைத்து வழிபட்டார்கள். பின்னர் அதுவே ஆலயமாக மாறியது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



