அந்தக் காலத்தில் மக்களுக்கு பொழுது போக்காக இருந்தது நாடகம் தான். பகல் முழுவதும் களைத்து ஓடாய் உழைத்து நொந்து போன மக்களுக்கு ஒரே ஆறுதலாக இருந்தது நாடக உலகம் தான். சினிமா தோன்றுவதற்கு முன்பு இது வந்ததால் சினிமா வந்த பின்பும் இந்த நாடகம் மறையவில்லை.
நாடக நடிகர்கள் தான் சினிமா உலகிலும் ஜொலித்தனர். அந்த வகையில் நாடக அரங்குகளை கலையரங்கம் என்று சொல்வர். சினிமா அரங்குகளைத் திரையரங்கம் என்றும் ஆங்கிலத்தில் தியேட்டர் என்றும் சொல்வர்.
ஆரம்பத்தில் டூரிங் டாக்கீஸாக இருந்த தியேட்டர் நாளடைவில் மெருகேறி மல்டி பிளக்ஸ் லெவலுக்கு வந்து விட்டது. அதிநவீன வசதிகள் உள்ள திரையரங்குகளைப் பார்ப்பதற்கு என்றே மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வர்.
எவ்வளவு தான் சொகுசான வசதிகளுடன் தற்போது தியேட்டர் வந்தாலும் அந்தக் காலத்தில் உள்ள டூரிங் டாக்கீஸில் மண்ணைக் கூட்டி அதில் உட்கார்ந்து பார்த்த திருப்தி இல்லை என்கிறார்கள்
இன்றைய பெரிசுகள். அதேபோல அந்தக் காலகட்டத்தில் எல்லாம் ஒரு படம் நன்றாக இருந்தால் ஒரு வருடத்தையும் கடந்து ஓடும். இப்போது எவ்வளவு தான் நல்ல படங்களாக இருந்தாலும் 25 நாள்களைக் கடப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. முதல் 3 நாள்களில் அவர்கள் வசூலைப் பார்த்து விடுகிறார்கள்.
அதன்பிறகு தியேட்டரில் 50 பேருக்கு மேல் படம் பார்ப்பதே அரிதாகி விடுகிறது. அதனால் பல தியேட்டர்கள் காணாமல் போன வரலாறும் உண்டு. அது சரி. விஷயத்திற்கு வருவோம்.
உலகிலேயே மிகப்பெரிய சினிமா தியேட்டர் ஸ்பெயின் நாட்டில் உள்ள கினிபோலிஸ். இது ஒரு மல்டிபிளக்ஸ் தியேட்டர். இங்கு 25ஸ்கிரீன்ஸ் இருக்கு. இந்தத் தியேட்டர்ல ஒரே சமயத்துல 9200 பேர் படம் பார்க்க முடியும். 996 பேர் உட்காரக்கூடிய வகையில் ஒரு ஆடிட்டோரியமும் உள்ளது.
2001ல் கட்டப்பட்டது. கினிபோலீஸ் என்கிற ஒரு பிரெஞ்ச் பெல்ஜியன் கம்பெனி தான் இந்தத் தியேட்டரை நடத்தி வருகிறது. உலகம் முழுவதும் 110 தியேட்டர்களுக்கு மேல் இந்தக் கம்பெனி வைத்துள்ளனர். இந்தத் தியேட்டர்ல படம் பார்த்துக் கொண்டு இருக்கும்போது படத்துக்கு ஏற்ற மாதிரி இந்த சீட்டுகள் எல்லாம் அசைந்து கொடுக்கும்.
தண்ணீர் காட்சி வரும்போது தியேட்டருக்கு உள்ளேயே தண்ணீர் வருவது போல செட்டப் பண்ணிருக்காங்க. அதுமட்டுமல்லாமல் திரையில் தெரியும் வாசனையை திரையரங்குகளுக்கு உள்ளேயும் வருவது போல செட்டப், தீப்பற்றி எரிகையில் தியேட்டரினுள் புகை, இடி மின்னல் காட்சிகள் வரும்போது அதுக்கேற்ற லைட்டிங் செட்டப் என தியேட்டரில் பார்வையாளர்களுக்கு ஒரு உண்மையான அனுபவத்தை உருவாக்கும் வகையில் இந்தத் தியேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.