ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படம் பாபு. இது பஸ்டர் ஹிட் கொடுத்த தெய்வமகன் படத்திற்குப் பிறகு வந்ததால் எல்லோரும் பெரிதும் எதிர்பார்த்தனர். பொதுவாக ஒரு படம் ஹிட்டுன்னாலே அடுத்த படத்தை சூப்பர்ஹிட்டாக்க வேண்டும் என்றே அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு உழைப்பார்கள்.
ஆனால் சூப்பர்ஹிட் என்றால் மெகா ஹிட் கொடுப்பார்கள். இது மெகா ஹிட்டான படம் அப்படி என்றால் பிளாக் பஸ்டர் ஹிட்டைக் கொடுக்க வேண்டும். அப்படி வந்தது தான் பாபு படம். இந்தப்படம் குறித்து இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…
இந்தப் படத்தில் சிவாஜி ரிக்ஷாக்காரன் கேரக்டரில் நடித்து இருப்பார். இதற்காக அவருக்கு ஸ்பெஷலாக ஒரு காக்கிச்சட்டை தைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அது ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக அதைத் தவிர்த்து விட்டு லைட்பாயின் நைந்து போன பழைய காக்கிச் சட்டையை வாங்கி மாட்டிக்கொண்டார் சிவாஜி.
ஒரு பழைய லுங்கி, கிழிந்த விரல்கள் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும் பழுப்புநிற கான்வாஸ் ஷ_, பிய்ந்தும் பிசிருமாக இருக்கும் தாடியை ஒட்டிக் கொண்டார். படப்பிடிப்பு தொடர்ந்தது. சிவாஜி காசநோயால் பாதிக்கப்பட்ட வேடம்.
அடிமார்பில் இருந்து வரும் வேதனை கலந்த இழுப்போடு கூடிய கபம் கட்டிய ஈர இருமல் தொடர்ந்து வர வேண்டும். அதிகமாக இருமி விட்டால் சுத்தமாகப் பேச முடியாது. அதனால் அவர் இருமலை நான் எடுத்துக் கொண்டேன். நான் இருமும் சப்தம் ஒலிப்பதிவாகும்.
அவர் இருமுவதைப் போல அதற்கேற்ப நடித்து விடுவார். பிறகு வசனம், நடிப்பு அவருக்குச் சொந்தம். ஒருநாள் அதிகமாக பல வாகனங்களோடு போட்டியிடுவதாக அவரை ரிக்ஷாவை இழுத்துக்கொண்டு ஓடச் சொல்லி படம் எடுத்தேன்.
ஒருகட்டத்தில் மார்பைப் பிடித்துக் கொண்டு என்னிடம் வந்தார். திரிலோக் நான் உண்மையான நிஜ ரிக்ஷாக்காரன் இல்லை. எனக்கு ரிக்ஷா இழுத்துப் பழக்கமும் இல்லை. உடம்பு படபடவென்று வருகிறது. மார்பு வலிக்கிறது. கொஞ்சம் ஓய்வு கொடுக்கிறீர்களா என்று கேட்டார்.
அப்போது தான் நான் அந்தப் பாத்திரமாக மாறிவிட்ட அவருக்கு என்றை அறியாது கொடுத்த துன்பத்தை உணர்ந்தேன். நானும் ரிக்ஷாவை இழுத்துப் பார்த்திருக்கிறேன். அதற்கு தனி சக்தி வேண்டும். பேலன்ஸ் பண்ண வேண்டும்.
அது படத்தின் கடைசி கட்டம். சூட்டிங் தொடங்கியது. பாபுவின் வளர்ப்பு மகளின் திருமண நாள். பாபு தன் சபதத்தை நிறைவேற்றிய நாள். பாபு வந்து வாழ்த்துவார் என்று மணமகள் காத்திருந்தாள். ஆனால் கடைசி வரை வரவே இல்லை.
கழுத்தில் தாலியோடு மகளைப் பார்க்க நினைத்த பாபு உடல் எல்லாம் ஓய்ந்து பிச்சைக்காரன் போல பந்தியில் உட்காருகிறார். அந்த நேரத்தில் அடக்க முடியாத அவரது இருமலே அவரைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது.
படத்தின் கதைப்படி பாபு இறந்துவிடுகிறார். இந்தப்படம் தான் எனக்கு சிவாஜியின் படங்களிலேயே மிகவும் படித்த படம் இது. இந்தப்படத்தில் சிவாஜியின் ஜோடியாக சௌகார் ஜானகி நடித்துள்ளார். இந்தப்படத்தை என் மனைவி பாரதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட சினி பாரத் என்ற கம்பெனியின் முதல் படைப்பு இது. மனதிருப்தியான வெற்றிப்படமாக அமைந்தது.