இயக்குநர் பாலா இயக்கத்தில் வருகிற பொங்கல் தினத்தன்று வணங்கான் திரைப்படம் வெளியாக உள்ளது. அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இயக்குநர் பாலா சினிமாத் துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிய நிலையில் அண்மையில் வணங்கான் இசை வெளியீட்டு நிகழ்ச்சியுடன் அவரது சினிமா பயணமும் கொண்டாடப்பட்டது. சேது படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகில் அறிமுகமான பாலா, பாலுமகேந்திராவின் மாணவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வித்தியாசமான கோணத்தில் ஹீரோக்கள் தோற்றம் மற்றும் கதை நகர்வுகளை காட்சிப்படுத்தி இப்படியும் படம் எடுக்கலாம் என இளம் இயக்குநர்களுக்கு ஒரு வழிகாட்டியாக வித்திட்டவர்தான் இயக்குநர் பாலா. இதற்கு முன் வந்த படங்கள் அனைத்தும் ஹீரோயிசம், காதல், சோகம் என்றிருந்த நிலையில் வழக்கமான சினிமா இல்லாமல் பாலாவின் படங்கள் வளர்ந்து வந்த, புது முக இயக்குநர்களுக்கு உத்வேகத்தினைக் கொடுத்தது. இதனால் பல படங்கள் பாலாவின் பாணியில் உருவாகின.
அந்த வகையில் பாலாவின் இயக்கத்தில் கடந்த 2009-ல் உருவான நான் கடவுள் திரைப்படம் இதுவரை தமிழ்சினிமா காட்டாத அகோரிகளின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டியது. ஆர்யா, பூஜா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது. ஆர்யாவுக்கு திரை வாழ்வில் புதிய திருப்பத்தினைக் கொடுத்தது.
இயக்குநர் பாலா நான் கடவுள் திரைப்படத்திற்காக முதலில் தேர்வு செய்திருந்தது அஜீத் என்பது பலரும் அறிந்திராத தகவல். இதற்காக போட்டோஷுட் உள்ளிட்டவை எடுக்கப்பட்டது. அஜீத் சில காட்சிகள் நடித்த நிலையில் திடீரென படத்திலிருந்து விலகினார்.
இதனையடுத்தே ஆர்யா இப்படத்தில் நடித்தார். முதலில் பாலாவின் படம் இயக்கும் ஸ்டைல் அஜீத்துக்குப் பிடித்துப் போக இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றலாம் என விரும்பியிருக்கின்றனர். இதனையடுத்தே நான் கடவுள் படத்தினை அஜீத்துக்காக எழுதியிருக்கிறார் பாலா. ஆனால் அது நிறைவேறாமலேயே போய்விட்டது என இயக்குநர் பாலா பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இயக்குநர் நினைத்தால் எந்த நடிகரையும் எந்த கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிக்க வைக்க முடியும் என்றும், சரியான புரிதல் இருந்தால் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்தும் படம் இயக்குவேன். என்போக்கில் என்னை விட்டுவிட வேண்டும். வேறு தலையீடு இருக்கக் கூடாது. ஆனால் என் போக்கியல் என்னை விடுவாரா என்பது சந்தேகம். என்றும் அந்தப் பேட்டியில் பாலா தெரிவித்திருக்கிறார்.