அமீர் சுல்தான் என்ற இயற்பெயரைக் கொண்ட அமீர் அவர்கள் தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். 2002 ஆம் ஆண்டு ‘மௌனம் பேசியதே’ என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
சூர்யா, லைலா, த்ரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. நடிகர் சூர்யாவின் வித்தியாசமான கோணத்தையும் நடிப்பையும் இப்படத்தில் பார்க்க முடிந்தது. அடுத்ததாக 2005 ஆம் ஆண்டு ‘ராம்’ திரைப்படத்தை இயக்கினார்.
பின்னர் 2007 ஆம் ஆண்டு ‘பருத்திவீரன்’ திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தின் வாயிலாக தான் நடிகர் கார்த்தி அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. பருத்திவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று அமீர் பிரபலமடைந்தார்.
அதற்குப் பின்பு ‘ஆதிபகவன்’ (2013), ‘பேரன்பு கொண்ட பெரியோர்களே’ (2015) ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இது தவிர ‘வடசென்னை’, ‘மாறன்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அமீர் அவர்களின் திரைப்படங்கள் உணர்ச்சி மிகுந்ததாக மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் இருக்கும்.
இந்நிலையில் தற்போது அமீர் அவர்கள், ‘உயிர் தமிழுக்கு’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வருகிற மே 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நேர்காணலில் கலந்துக் கொண்டார் அமீர். அப்போது அமீர் அவர்களிடம் நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்போது படம் இயக்கியிருக்கிறீகள், ஏன் இவ்வளவு இடைவேளை என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ஆதங்கத்துடன் பதிலளித்தார் அமீர். அவர் கூறியது என்னவென்றால், ஒரு படத்தை இயக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. கதையை யோசித்து, அதை தயாரிப்பாளர்களிடம் சொல்லி ஓகே செய்துவிட்டு, நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்து, லொகேஷன் பார்த்து படம் முடிகிறதுக்கு அவ்வளவு விஷயங்கள் தேவை.
இயக்குனரை பார்த்து மட்டும் ஏன் இடைவேளை என்ற கேள்வி கேட்கிறீர்கள். ஒரு நாவல் ஆசிரியரிடமோ, எழுத்தாளரிடமோ இந்த கேள்வியை கேட்பதில்லை. அவர்களை போல தான் இயக்குனர்களும். ஒரு படைப்பை உருவாக்க எங்களுக்கு நேரம் தேவை. எங்களை ரசிப்பவர்கள் கேட்டால் நல்லது, அதே விமர்சித்து கேள்வி கேட்டால் எனக்கும் கோபம் வரும். என்னால் என் வாழ்நாளில் எத்தனை படைப்பை உருவாக்க முடியுமோ அதைத்தான் என்னால் செய்ய முடியும், அதை விட்டுவிட்டு வருடத்திற்கு ஒரு படம் பண்ணியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் நான் வேலை செய்யவில்லை. நான் ஆத்மார்த்தமாக பணி புரிபவன் என்று பதிலளித்துள்ளார் அமீர்.