நகைச்சுவை நடிகர்களில் ஜனகராஜ் தமிழ்ப்படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். 80களில் இவர் நடிக்காத படங்களே இல்லை என்ற அளவிற்கு இவருடைய மார்க்கெட் இருந்தது. சத்தமாகப் பேசுவதும், இவரது மெட்ராஸ் பாஷையும் தான் இவரை ரசிகர்கள் கொண்டாட காரணமாயின.
80 முதல் 90 வரை இவர் நடித்த படங்கள் பெரிதும் ரசிக்கப்பட்டன. அதன்பிறகு இவருடைய படங்களின் எண்ணிக்கைக் குறைய ஆரம்பித்தது. பாரதிராஜா, டெல்லி கணேஷ், மணிரத்னம் இவரது ஆரம்ப கால நண்பர்கள். அதனால் அவர்களது படங்களில் இவர் பெரும்பாலும் நடித்து விடுவார். இவருக்கு ஏற்பட்ட திடீர் விபத்தால் முகம் காயமானது. அப்போது நடந்த அறுவை சிகிச்சையில் இவர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்கிறார்கள்.
ஒரு கண் சிறியதாகவும், ஒரு கண் பெரியதாகவும் இருப்பதற்கும் இதுதான் காரணமாம். இனி சினிமாவில் எல்லாம் நடிக்கவே முடியாது என்று நினைத்தாராம்.
முகத்தில் அறுவை சிகிச்சை நடந்தபோது பாரதிராஜா பார்க்க வந்தாராம். என் அடுத்த படத்தில் நீ தான் ஹீரோ. ராதாவுக்கு ஜோடி என சொல்ல இவரால் நம்பவே முடியவில்லையாம். அதன்பிறகு வந்த படம் தான் காதல் ஓவியம்.
செவப்பு வில்லு என்ற படத்தில் தான் இவர் முதலில் நடித்தார். அதன் பிறகு கன்னிராசி படத்தில் நடித்து பிரபலமானார். கிழக்கே போகும் ரயில், சுவரில்லாத சித்திரங்கள், கல்லுக்குள் ஈரம், பாலைவனச்சோலை படங்கள் இவருக்குத் தனி அடையாளத்தைத் தந்தன.
படிக்காதவன் படத்தில் ‘என் தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா’ என அவர் பேசும்போது தியேட்டரே சிரிப்பலையால் குலுங்கியது.
நாயகன் படத்தில் கமலுடன் படம் முழுக்க வந்து கலகலப்பூட்டுவார். அதே நேரத்தில் குணச்சித்திர கேரக்டரையும் செய்வார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் இவரது காமெடி தூள் கிளப்பும். தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
அதன்பிறகு இவருக்கு முக்கியத்துவம் இல்லாத வேடங்களே வந்தன. அதற்குள் கவுண்டமணி, செந்தில், விவேக் ஆகியோர் வர ஆரம்பித்தனர். அப்போது ஜனகராஜின் படங்கள் குறைய ஆரம்பித்தன. ரஜினியின் அருணாச்சலம், மணிரத்னத்தின் ஆயுத எழுத்து போன்ற ஒரு சில படங்கள் தான் இவருக்குக் கிடைத்தன.
10 வருட இடைவெளிக்குப் பிறகு விஜய்சேதுபதியின் 96 என்ற படத்தில் நடித்தார். இப்போது அவருக்கு 70 வயதாகிறது. அதன்பிறகு நீண்டகாலமாக அவர் கோலிவுட்டில் இருந்து காணாமல் போனார். அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்றெல்லாம் பேச்சுகள் கிளம்பின.
வலைதளங்களில் அவரைப் பற்றி விதவிதமான செய்திகள் எல்லாம் வந்தன. இந்தநிலையில் அவரைத் தேடிச் சென்று பேட்டி எல்லாம் எடுத்தனர். அவருடைய உடல்நிலை சினிமாவில் நடிக்க ஒத்துழைக்கவில்லை. என்றாலும் இப்போதும் அவர் தாத்தா என்று ஒரு படத்தில் நடித்தார். இது தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையில் நடக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான குறும்படம். நரேஷ் இயக்கியுள்ளார்.