தமிழ் சினிமாவில் சிறந்த மனிதனாக வலம் வந்த விஜயகாந்தின் உயிர் காற்றோடு கலந்து விட்டது. 71 வயதில் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். சினிமா, அரசியல் என இரண்டு ஏரியாவிலும் பூந்து விளையாடிய விஜயகாந்த், யாருமே குறை கூற முடியாத தன்னிகரற்ற கலைஞனாக இருந்து மறைந்துள்ளார்.
சினிமாவில் ஆக்ஷன் படங்கள், பேமிலி எண்டெர்டெயினர் படங்கள் என இரண்டிலும் அதிக கவனம் செலுத்திய விஜயகாந்த், பல கஷ்டங்களை தாண்டி சினிமாவில் முன்னணி நடிகனாகவும் வளர்ந்தார். இதனைத் தொடர்ந்து, தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் தொடங்கி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், ஊழியர்கள் என அனைவரிடமும் சமமாக பழகும் தன்மை நிச்சயம் விஜயகாந்திடம் மட்டும் தான் உண்டு என சொல்லி விடலாம்.
மேலும் தன்னை தேடி வருபவர்கள் யாராக இருந்தாலும் வீட்டுக்கு வந்தால் அவர்களுக்கு சாப்பாடு போட்டு பசியாற வைத்து தான் திருப்பி அனுப்புவார். அந்த அளவுக்கு அனைவரிடமும் எளிமையாக பழகும் விஜயகாந்த், சமீப காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அரசியலிலும் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் அவரது உடல் வலுவிழந்த சூழலில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருந்த விஜயகாந்த், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகி இருந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட, அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் காலமானார் என்ற தகவலும் வெளியானது.
ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே அதிர்ச்சியிலும், வேதனையிலும் மூழ்கி கிடக்க, அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் கண்ணீரை அஞ்சலிகளாக செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஷால் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“அண்ணே என்னை மன்னிச்சுருங்கணே. இந்த நேரம் நான் உங்க பக்கத்துல இருந்து, உங்க முகத்தை பார்த்து உங்க காலை தொட்டு கும்பிட்டு அங்க நான் இருந்திருக்கணும். ஆனா வெளிநாட்டுல இருந்தது என் தப்பு தான். என்னை மன்னிச்சுருங்க. நல்லது செய்யுறது சாதாரண விஷயமில்ல. அதை நான் உங்ககிட்ட இருந்து கத்துருக்கேன். உங்க அலுவலகத்துக்கு யாராவது பசின்னு வந்தா அவங்களுக்கு சாப்பாடு போட்டு அனுப்புவீங்கனு கேள்விப்பட்டிருக்கேன். நானும் அதை செய்யணும்னு நினைக்குறேன்.
ஒரு அரசியல் தலைவரோ, முன்னாள் நடிகர் சங்க தலைவரோ இறந்ததை விட ஒரு நல்ல மனிதர் இறந்ததை தான் என்னால ஜீரணிக்க முடியல. ஒரு நடிகரா நீங்க பேரு வாங்கி இருக்கீங்க. ஆனா ஒரு மனிதனா பேர் வாங்குறது சாதாரண விஷயமில்ல. உங்க பேர்ல நான் இன்னும் நல்லது பண்ணனும்னு தோணுதுணே. உங்க ஆத்மா சாந்தி அடையட்டும்” என கண்ணீருடன் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.