தளபதி விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து ஹெச். வினோத் இயக்கத்தில் அடுத்த படத்துடன் தன்னுடைய திரைப்பயணத்தை நிறைவு செய்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகச் செய்திகள் வந்தது. மேலும் லைகா நிறுவனத்துடன் புதிய படத்திற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
ஜேசன் சஞ்சய் முதன் முதலாக இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனையடுத்து தற்போது ஜேசன் சஞ்சய் அடுத்து இயக்கப் போகும் புதிய படத்தில் ராயன் படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த நடிகர் சுந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. தெலுங்கு திரைப்பட உலகில் பிரபல நடிகராக இருக்கும் சுந்தீப் கிஷன் தமிழில் யாருடா மகேஷ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்தார்.
மேலும் கசடதபற, மாயவன், கேப்டன்மில்லர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான படமான ராயன் சுந்திப் கிஷனுக்கு பெரிய வரவேற்பினைக் கொடுத்தது. குறிப்பாக வாட்டர் பாக்கெட் பாடல் இணையத்தில் இன்றும் வைரலான பாடலாக வலம் வருகிறது.
இதனையடுத்து ஜேசன் சஞ்சய் சுந்தீப் கிஷனை ஹீரோவாக வைத்து தனது அடுத்த படத்தினை இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாட்டில் திரைப்படவியல் படித்த ஜேசன் சஞ்சய் ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கி இருக்கிறார். இதனை தன் தந்தை விஜய்யிடம் போட்டுக் காட்ட அவரும் அவரைப் பாராட்டியிருக்கிறார்.