மகனுக்கு விஜயகாந்த் வைக்க நினைத்த பரபர பெயர்.. பிடிவாதமாக இருந்தும் கடைசி நேரத்தில் மாறிய பின்னணி..

By Ajith V

Published:

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராகவும், அரசியலில் மிக குறுகிய காலத்தில் முக்கியமான இடத்தை பிடித்தவருமாக இருந்தவர் தான் விஜயகாந்த். யார் கண் பட்டதோ தெரியவில்லை சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியதுடன் பொது வெளியிலும் தோன்றாமல் இருந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத விதமாக கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவருக்கு விடை கொடுக்க, இந்த ஒட்டுமொத்த தமிழகமும் கண்ணீர் வடித்திருந்தது. சினிமாவில் அத்தனை நல்ல விஷயங்களை செய்துள்ள விஜயகாந்த், தான் பட்ட கஷ்டத்தை எல்லாம் கடந்து வந்ததுடன் தான் உண்ணும் உணவை சினிமாவில் இருக்கும் கடைநிலை ஊழியன் வரை உண்ண வேண்டும் என்பதற்காக மிக சிறப்பாக உணவுகளை தயார் செய்து வந்தார்.

அது மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் தன்னை தேடி வருபவர்களுக்கு உணவளித்து வயிறார அனுப்பி வைத்ததுடன் மட்டுமில்லாமல் நடிகர் சங்க தலைவராக இருந்த போது தமிழ் சினிமாவின் முன்னேற்றத்திற்கும் பல வழிகளை மேற்கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அரசியல் வருகைக்கு பின், திடீரென அவர் உயிரிழந்த நிலையில் இரண்டு மகன்கள் இருந்த போதும் அவர்களில் ஒருவரது திருமணத்தை கூட பார்க்காமல் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை மிகவும் வேதனைப்படுத்தி இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் தனக்கு முதல் மகன் பிறந்த போது அவருக்கு விஜயகாந்த் வைக்க வேண்டும் என நினைத்த பெயர் பற்றியும் பின்னர் சில காரணங்களால் அதை மாற்றியது பற்றிய தகவலையும் தற்போது காணலாம். விஜயகாந்தின் முதல் மகன் பிறந்த சமயத்தில் அவருக்கு சவுகத் அலி என்ற முஸ்லிம் பெயர் தான் வைப்பேன் என்று பிடிவாதமாக விஜயகாந்த் இருந்ததாக கூறப்படுகிறது.

மதங்கள் மீது நம்பிக்கை இல்லாததால் இந்த முடிவை அவர் எடுத்திருந்த நிலையில் வெளிநாடு செல்லும் சமயத்தில் அவரது பெயரே பிரச்சினையாக வரலாம் என்றும் ஏதாவது சந்தேகம் எழுந்து விசாரணை வரைக்கும் செல்லலாம் என்றும் விஜயகாந்திற்கு நெருக்கமான சிலர் கூறி எச்சரித்துள்ளனர். அதன் பின்னர்தான் அந்த பெயரை வைக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு சண்முக பாண்டியன் என்றும் தனது மகனுக்கு விஜயகாந்த் பெயர் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.