கேப்டன் என்று சொன்னதுமே நம் நினைவுக்கு வரும் ஒரு நபர் விஜயகாந்த் தான். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் அவர் நடிக்க ஆரம்பித்த போது சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அதற்கு பின்னர் தான் தன்னை ஒரு முன்னணி நடிகராக அவர் நிலை நிறுத்திக் கொண்டார். அது மட்டுமில்லாமல்,மிக சாதாரணமாக அந்த இடத்திற்கு அவர் வந்து விடவில்லை.
சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிய போது, விஜயகாந்த் சந்தித்த அவமானங்கள் ஏராளம். விஜயகாந்தின் முன்னிலையிலேயே பலரும் அவரை ஏளனமாகவும், இளக்காரமகவும் பேச ஆரம்பித்தனர். இவை அனைத்தையும் கண்டு துவண்டு சினிமாவை விட்டு விலகிப் போகாமல், சிறந்த நடிகராகும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்தி அதில் வெற்றியும் கண்டார் விஜயகாந்த்.
முன்னதாக, தான் சினிமாவில் நடிக்க தொடங்கிய போது சந்தித்த கஷ்டங்களை பற்றி நினைத்த விஜயகாந்த், தனக்கே இப்படி ஒரு நிலை வரும் போது சினிமாவில் கடைநிலை ஊழியன் நிலை என்னவாக இருக்கும் என யோசித்து பார்த்தார். இதனால்,எந்த ஒரு சினிமா ஊழியனும் கஷ்டப்பட கூடாது என நினைத்த விஜயகாந்த், தனது படப்படிப்பில் நடிகர் முதல் கடைசி கட்ட ஊழியன் வரை சமமாக பார்த்து வந்தார். அது மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்த், வெளியே தெரியாமல் கூட சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் தொடங்கி கஷ்டப்படும் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வந்தார்.
இந்த நிலையில், ரஜினிக்கு வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை விஜயகாந்த் மறுத்ததற்கான காரணம் குறித்த தகவல் அதிக கவனம் பெற்று வருகிறது. கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘முரட்டுக்காளை’. ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படத்தை எஸ். பி. முத்துராமன் இயக்கி இருந்தார். மேலும் ரஜினிகாந்துடன் ரதி அக்னிஹோத்ரி, சுருளி ராஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பல படங்களில் நாயகனாக நடித்து மக்கள் மனம் கவர்ந்த ஜெய்சங்கர் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.
இளையராஜா இசையில், பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக, படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. முன்னதாக, இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிக்க விஜயகாந்தை படக்குழு தேர்வு செய்ததாக தகவல்கள் கூறுகின்றது. ஆனால், விஜயகாந்தின் நண்பரும், மறைந்த பிரபல தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தர், நீ வில்லனாக நடித்தால் தொடர்ந்து அது போன்ற வாய்ப்புகள் தான் வரும் என கூற, விஜயகாந்தும் நண்பனின் வாக்கை உயர்ந்த ஒன்றாக கருதி அந்த வாய்ப்பை மறுத்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றது. ஒரு வேளை அன்று ரஜினிக்கு வில்லனாக விஜயகாந்த் முரட்டுக்காளை படத்தில் நடித்திருந்தால், இதுவரை பலரும் காணாத அவரது வில்லத்தனமான நடிப்பை நிறைய படத்தில் பார்த்திருக்க கூட வாய்ப்பு உருவாகி இருக்கலாம் என்றும் பலர் கருதுகின்றனர்.
கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.