சினிமாவில் நடிகராக வருபவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. படத்தில் நாம் பார்ப்பதற்கும், நிஜ வாழ்க்கையில் அவர்கள் இருக்கும் இடத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும் அதே வேளையில் திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருந்த ஒருவர் தான் கேப்டன் விஜயகாந்த்.
சினிமாவில் முன்னணி ஹீரோவாக உயர்வதற்கு பல தடைகளை தாண்டி ஜெயித்த விஜயகாந்த், தனக்கு நேர்ந்தது தன்னை சுற்றி இருக்கும் எந்த சினிமா கலைஞனுக்கும் நடந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்து அனைவரையும் சிறப்பாக பார்த்துக் கொண்டார். தன்னை தேடி வீட்டில் வருபவர்களுக்கும் சாப்பாடு போடுவது, சினிமா வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகர்களுக்கு தன்னால் முடிந்த வரையிலான வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்தது என பலருக்கும் விஜயகாந்த் செய்யாத உதவியே கிடையாது.
விஜயகாந்த் தனது இறுதி காலத்தில் நோய்வாய்ப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்து போனாலும் அவர் செய்த உதவியால் பிரபலமாக பலர் இருக்கும் வரை நிச்சயம் அவரது புகழ் இந்த உலகையும் சுற்றிக் கொண்டே தான் இருக்கும். இதனிடையே நடிகர் விஜய்யின் ஆரம்ப சினிமா கால பயணத்தின் போது அவருக்காக விஜயகாந்த் செய்த உதவி பற்றி ஜாக்குவார் தங்கம் ஒரு நேர்காணலில் தெரிவித்த கருத்து தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக ஜாக்குவார் தங்கம் ஒரு நேர்காணலில் தெரிவித்த கருத்தின்படி, எம்ஜிஆர் நகரில் அவரது உடற்பயிற்சி கூடம் ஒன்றை திறந்து வைப்பதற்காக கேப்டன் விஜயகாந்தை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் விஜயகாந்துடன் அந்த சமயத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த விஜய்யையும் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார்.
இது பற்றி விஜயகாந்திடம் ஜாகுவார் தங்கம் சொல்ல, அவரோ விஜய் தம்பி வருகிறார் என்றால் கட் அவுட், போஸ்டரில் அவரது புகைப்படத்தை பெரிதாக போடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். இன்னொரு பக்கம், விஜயகாந்த் சிறப்பு விருந்தினராக வராமல் போய் விடுவாரோ என்றும் ஜாகுவார் தங்கம் நினைத்துள்ளார். ஆனால், வளர்ந்து வரும் நடிகருக்காக விஜயகாந்த் செய்த இந்த விஷயம் ஜாகுவார் தங்கத்தை அதிகம் நெகிழ வைத்துள்ளது.
ஆனால், நடிகர் விஜய்யோ தனக்கு விளம்பரம் வேண்டாம் என்றும், கேப்டன் விஜயகாந்த் படத்தை பெரிதாக போடும்படியும் கோரிக்கை வைத்துள்ளார். இதனிடையே, உடற்பயிற்சி கூடம் திறப்பு விழாவிற்கு விஜய் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வர, சாலை முழுவதும் கூட்டமும் அதிகரித்துள்ளது.
அதே வேளையில், மாலை 6 மணியாகியும் விஜயகாந்த் அங்கே வரவில்லை என கூறப்படுகிறது. இனிமேல் வரமாட்டார் என ஜாகுவார் தங்கமும் நினைக்க, கொஞ்ச நேரத்தில் அங்கே வந்த கேப்டன், கூட்டம் அதிகமாக இருப்பது தெரிந்து காரில் வந்தால் லேட்டாகி விடும் என்பதால் பைக்கில் ஒருவரை அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த சமயத்தில் வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்காக விஜயகாந்த் இப்படி ஒரு உதவி செய்ததுடன் மட்டுமில்லாமல், கூட்டத்திற்கு மத்தியில் பைக்கில் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்ததும் அனைவரையும் நெகிழ வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.