Vijayakanth: இன்று இந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாகி இருந்த லியோ திரைப்படம், தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாகவும் மாறி இருந்தது. விஜய்யின் ஒவ்வொரு திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் நாள் முதல் படம் ரிலீஸ் ஆகும் நாள் வரை உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருப்பார்கள்.
இதனால், விஜய்யின் அனைத்து படங்களுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. லியோ படத்தின் வெற்றிக்கு பின்னர், வெங்கட் பிரபு இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத “Thalapathy 68” என குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். AGS தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வரும் சூழலில், நடிகர் விஜய்யுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரபு தேவா, மைக் மோகன், பிரஷாந்த், யோகி பாபு, வைபவ் என ஏராளாமானோர் தளபதி 68 படத்தில் நடித்து வருகின்றனர். வெங்கட் பிரபு – விஜய் ஆகியோர் முதல் முறையாக இணைந்துள்ள சூழலில், இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். அதே போல, சயின்ஸ் பிக்ஷன் கதையம்சம் கொண்ட திரைப்படம் என்ற ஒரு தகவலும் பரவி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தற்போது டாப் ஹீரோவாக விஜய் இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் தன்னை முன்னணி ஹீரோவாக நிறுத்த சற்று சிரமப்பட்டார். விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான SA சந்திரசேகர் இயக்கத்தில் அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார் விஜய். ஆனாலும், அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இதனால், விஜய்யை வைத்து SA சந்திரசேகர் இயக்கிய செந்தூரபாண்டி திரைப்படத்தில் ஒரு முன்னணி ஹீரோவை இணைத்து படத்தில் விஜய் பக்கம் கவனம் பெற வைக்க திட்டம் போட்டதாகவும் தெரிகிறது. அப்படி இருக்கையில், முதலில் சத்யராஜை அணுகி உள்ளார் சந்திரசேகர். ஆனால், அவர் நடிக்கலாம் என்றே கூறி அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. இதனால், என்ன செய்வதென தெரியாமல் குழம்பி உள்ளார் சந்திரசேகர்.
அந்த சமயத்தில், நடிகர் விஜயகாந்திடம் இது பற்றி கேட்டு பார்க்கலாம் என விஜய்யின் அம்மா ஷோபா ஆலோசனை கொடுக்க, உடனடியாக விஜயகாந்தையும் தொடர்பு கொண்டுள்ளார் SAC. அடுத்த நிமிடமே வீடு தேடி வந்த விஜயகாந்த், ‘தம்பி நல்லா வரணும். நான் நடிக்கிறேன்’ என கூறியதுடன் மட்டுமில்லாமல், படத்தின் கதையை கூட கேட்காமல் நடிக்கவும் அவர் சம்மதம் தெரிவித்தார். விஜய்யின் சினிமா பயணத்தை திருப்பி போட்ட படம் என பூவே உனக்காகவை பலர் சொன்னாலும், அவர் மீது கவனம் அதிகம் பெற காரணமாக இருந்த திரைப்படம் செந்தூரபாண்டி தான்.
அதில், விஜயகாந்த நடிக்க சம்மதம் தெரிவித்தது, விஜய்யின் குடும்பத்தினரை கலங்கிப் போகவும் வைத்திருந்தது. இப்படி விஜய்யின் திரைப் பயணத்தில் விஜயகாந்த் பெரிய பங்கு வகித்துள்ள தகவல், ரசிகர்கள் பலரையும் கூட மனம் உருக வைத்துள்ளது.