சலார் படத்தை பார்க்க ஹைதராபாத்தில் விஜய் எடுத்த ரிஸ்க்.. பயந்த கோட் டீம்.. என்ன நடந்தது?

By Ajith V

Published:

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியா சினிமாவும் தற்போது அதிக எதிர்பார்ப்பில் காத்திருக்கும் திரைப்படம் என்றால் அது விஜய் நடிப்பில் உருவாகி உள்ள கோட் திரைப்படம் தான். மங்காத்தா, சரோஜா, சென்னை 28, மாநாடு உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி உள்ள வெங்கட் பிரபு, முதல் முறையாக கோட் திரைப்படம் மூலம் விஜய்யுடன் பணிபுரிந்துள்ளார்.

ஆர்மபத்தில் ஹைப் இல்லாமல் இருந்த இந்த திரைப்படம், ட்ரைலர் வெளியான பின்னர் அப்படியே அதன் ஆர்வம் இரு மடங்காக மாறி இருந்தது. செப்டம்பர் 5 ஆம் தேதி கோட் திரைப்படம் வெளியாக உள்ள சூழலில், பல திரை அரங்குகளில் டிக்கெட் புக்கிங்கும் ஆரம்பமாகி விட்டது. ரசிகர்கள் பலரும் டிக்கெட் கிடைக்காமல் எப்படியாவது முதல் நாள் முதல் ஷோ பார்த்தே ஆக வேண்டுமென்ற ஆர்வத்திலும் உள்ளனர்.

மேலும் கோட் பட ரிலீஸ் நெருங்கி வருவதால் படக்குழுவினர்கள் பலரும் நிறைய நேர்காணல் நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கோட் படத்தில் நடித்துள்ள வைபவ், விஜய் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

“கோட் படம் ஷூட்டிங்கின் போது நடிகர் விஜய் என்னிடம், மாலை படம் பார்க்க போலாமா என கேட்டார். நான் ஆச்சரியமாக பார்த்ததும், ‘ஏன்பா நான் எல்லாம் படம் பார்க்கக் கூடாதா?’ என கூறிக் கொண்டு ஷாருக் கானின் டங்கி என்ற படத்தை பார்ப்பதற்காக சென்றோம். நான், விஜய் சார், வெங்கட் பிரபு என பலரும் சென்று படம் பார்த்தோம்.

அடுத்த நாள் மீண்டும் சலார் படத்தை விஜய் சார் சென்று பார்த்தார். பொதுவாக, நான் ஒரு நடிகனாக பெரிய திரை அரங்கில் சென்று ஒரு படம் பார்க்க வேண்டுமென்று நினைப்பேன். ஆனால், சலார் படம் பார்ப்பதற்காக விஜய் சார் செய்தது வேற லெவல் விஷயம். ஹைதராபாத்தில் ஒரு மாஸ் தியேட்டர். அங்கே டிக்கெட் விலை வெறும் 80 ரூபாய் தான்.

சீட் மேல் நின்றபடி ரசிகர்கள் படத்தை கொண்டாடும் வகையிலான ஒரு திரை அரங்கம் தான் அது. அங்கே கத்திக் கொண்டாடி ரசிகர்கள் படத்தை பார்ப்பார்கள். அப்படி ஒரு திரை அரங்கில் பால்கனியில் அமர்ந்து கொள்ளாமல் திரைக்கு அருகே கீழ் இருந்த இருக்கையில் டிக்கெட் புக் செய்து விஜய் சலார் படம் பார்த்தார்.

எனக்கு டிக்கெட் முதலில் வந்ததும் நான் மாற்றி அனுப்பி விட்டீர்கள் என கூறினேன். ஆனால், விஜய் சார் தான் அப்படி கீழ் வரிசையில் டிக்கெட் புக் செய்ய சொன்னார் என்பது தெரிய வந்தது. ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் அங்கே போனால் சரியாக இருக்காது என நான் போக மறுத்தேன். ஆனால், விஜய் சார் அப்படி ஒரு ரசிகர்கள் கூட்டத்தின் வைபிற்கு மத்தியில் படம் பார்க்க விரும்புவாராம்.

அப்படி ஒரு திரை அரங்கிற்கு விஜய் சென்றதால் நாங்கள் முதலில் பயந்தோம். ஆனால், அவரோ கூலாக சென்று சிறப்பாக படத்தை ரசித்து விட்டு திரும்பி வந்தார். விஜய் நினைத்திருந்தால் தனியாக கூட ஷோ போட்டு அவர் படம் பார்த்திருக்கலாம்” என வைபவ் ஒரு நேர்காணலில் கூறி உள்ளார்.