தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் எம்ஜிஆர் எப்படி மிக முக்கியமான ஒரு ஸ்டாராக இருந்தாரோ அவருக்கு அடுத்தபடியாக அந்த இடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்துக் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது தீவிர ரசிகரான விஜய் அதற்கடுத்தபடியாக தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்து பட்டையை கிளப்பி வரும் நிலையில், இவர்களது ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சண்டை போடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
ஆனால் அதே வேளையில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவருமே நட்பு பாராட்டி வருவதுடன் மட்டுமில்லாமல் பல மேடைகளில் தற்போது வரையிலும் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன் என்பதையும் விஜய் எடுத்துரைத்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் மோதல்கள் ஒரு பக்கம் இருந்தாலும் நிஜமாக அவர்கள் இருவரும் நட்புடன் இருந்து வரும் சூழலில் இவர்கள் இருவரின் திரைப்படங்கள் எப்போது வெளியானாலும் அது சூப்பர் ஹிட் படங்களாக அமைந்து வருகிறது.
ஜனநாயகன் – ஜெயிலர் 2
அரசியலில் தற்போது நுழைந்துள்ள விஜய், ஜனநாயகன் படத்தில் நடித்துள்ள சூழலில், ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் 2 உருவாகி வருகிறது. இதனிடையே விஜய் படத்திற்காக தயாரான ஒரு பாடலை ரஜினியின் திரைப்படத்திற்காக ஒரு பிரபல இயக்குனர் கேட்டது பற்றி தற்போது பார்க்கலாம்.
விஜய் ஒரு காலத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்து வந்த நிலையில் அவரை ஆக்சன் ஹீரோவாக மாற்றியது திருமலை திரைப்படம் தான். இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்த நிலையில் இதில் வரும் அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டாகியிருந்தது. அந்த திரைப்படத்தில் தான் ‘அழகூரில் பூத்தவளே‘ என்ற மெலடி பாடலும் இடம் பெற்றிருக்கும். இந்த திரைப்படத்திற்கு பின்னர் ரஜினிகாந்தின் சந்திரமுகி படத்தின் இசையமைப்பாளராக வித்யாசாகர் பணிபுரிந்திருந்தார்.
பி. வாசுவின் பிடிவாதம்..
அந்த சமயத்தில்தான் அழகூரில் பூத்தவளே என்ற பாடலை சந்திரமுகி திரைப்படத்தில் கொடுக்குமாறு அதன் இயக்குனர் பி. வாசு கேட்டுள்ளார். அதேபோல ஒரு பாடல் நிச்சயம் எனது திரைப்படத்தில் வேண்டும் என்றும் கேட்க, வித்யாசாகரும் ஏராளமான டியூன்களை அனுப்பியுள்ளார். ஆனால் அழகூரில் பூத்தவளே என்ற பாடல் மயக்கத்தில் இருந்த பி. வாசுவுக்கு எந்த ராகமும் பிடிக்கவில்லை. அதேபோல ஒரு மெலடி வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த நிலையில் ஒரு சில இயக்குனர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய ஒரு பாடலின் ட்யூன் இருப்பதாக கூறி அதை பி. வாசுவுக்கு போட்டு காண்பித்துள்ளார் வித்யாசாகர்.

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
அதைக் கேட்டதுமே மறுகணம் மெய்சிலிர்த்து போனாராம் பி வாசு. அழகூரில் பூத்தவளே பாடலுக்கு இணையாக இந்த டியூன் இருப்பதாக கூற அப்படி உருவானது தான் சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா ஆகியோர் இடம் பெற்றிருக்கும் மெலடி பாடலான ‘கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்’.

சந்திரமுகி படம் கிட்டத்தட்ட 1000 நாட்கள் வரை பல திரையரங்களில் ஓடிய நிலையில் அதன் வெற்றிக்கு பாடல்கள் மற்றும் காமெடி காட்சிகளுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

