தமிழ் சினிமாவில் இன்று வெற்றிகரமாக இயங்கி வரும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் முதல் திரைப்படத்திலேயே ஹிட் கொடுக்க வேண்டும் என்பது சற்று சவாலான விஷயமாக தான் உள்ளது. அப்படி தனது முதல் திரைப்படத்திலேயே வெற்றி கொடுத்ததுடன் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் சில டெம்ப்ளேட்டுகளை உடைத்து கதை சொல்லி இருந்தவர் வெங்கட் பிரபு.
இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாகவே கிரிக்கெட் என்பது பலரின் மத்தியில் ஊறிப் போயிருக்கும் சூழலில் அதனை மையப்படுத்தி அதிகம் சினிமாவில் அறிமுகம் இல்லாத இளைஞர்களை கொண்டு தனது முதல் திரைப்படமான சென்னை 28-ஐ வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.
சென்னை 28
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடல்கள் மற்றும் பின்னணி இசை என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்த நிலையில் ஒரு இளம் கிரிக்கெட் அணியின் பின்னணியில் உருவான கதையும் பெரிய அளவில் சென்னை 28 ஹிட்டாக உதவியிருந்தது. ஜெய், மிர்ச்சி சிவா, நிதின், விஜய் வசந்த், பிரேம்ஜி என இந்த திரைப்படத்தில் நடித்த இளம் நடிகர்கள் அடுத்தடுத்து அதிகம் கவனம் பெற்றிருந்த நிலையில் வெங்கட் பிரபுவும் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களை இயக்கி விட்டார்.
அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தனது முதல் திரைப்படத்திலேயே சில குறியீடுகளை வைத்தது பற்றி கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார் வெங்கட் பிரபு. திரைப்படங்களில் டி கோடிங் என்ற பெயரில் அதில் ஒளிந்திருக்கும் நிறைய விஷயங்களை ரசிகர்கள் மிகவும் நுட்பமாக கவனித்து சமூக வலைத்தளங்களில் ரகசியத்தை உடைத்து வருகிறார்கள்.
வெங்கட் பிரபு குறியீடு
அந்த வகையில் தனது முதல் திரைப்படமான சென்னை 28 ல் தானே குறியீடாக வைத்த விஷயத்தை பற்றி சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார் வெங்கட் பிரபு. “சென்னை 28 படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு காட்சியில் நிதின் வீட்டிற்கு ஜெய் வரும் போது தொலைக்காட்சியில் கண்ணெதிரே தோன்றினாள் என்ற படம் ஓடிக் கொண்டிருக்கும்.
அந்த படத்தின் கதை தான் எங்கள் படத்தின் கதையும். அந்த படத்திலும் நண்பனின் சகோதரியை காதலிப்பது தான் கதை. எங்கள் படத்திலும் அதே கதை தான். இதே போல சரோஜா படத்தின் ஆரம்பத்தில் தனது குழந்தைக்காக ஒரு பிசிக்ஸ் ப்ராஜெக்ட்டை சரண் செய்து கொடுப்பார். அந்த படத்தின் கிளைமாக்ஸும் அதே போன்று ஒரு கேம் தான் வரும். குழந்தைக்காக செய்யும் போது அந்த ப்ராஜெக்ட் வெற்றி அடையாது. ஆனால் க்ளைமாக்சில் வெற்றி பெறுவது போல் வடிவமைத்திருப்பேன்.
இது போன்ற நிறைய குறியீடுகளை எனது திரைப்படங்களில் வைக்க தவறுவது கிடையாது” என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.