நடிகர் விஜய் நடிப்பில் இன்னும் 20 நாட்களுக்குள் வெளியாக உள்ள கோட் படத்தின் ட்ரைலர் பற்றி தான் தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பேச்சு இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமில்லாமல் இந்திய அளவிலும் கோட் திரைப்படம் பற்றி நிறைய கருத்துக்கள் வைரலாகி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு தற்போது அதிகரித்துள்ளது.
முன்னதாக, கோட் படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியான சமயத்தில் கோட் படத்தின் மீது ரசிகர்கள் நம்பிக்கையே இல்லாமல் போனது போல தான் இருந்தது. யுவன் இசையில் வெளியான 3 பாடல்களும் எடுபடவில்லை என ரசிகர்கள் கூற, இதை கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவே ஏற்றுக் கொண்டதுடன் படத்தோடு பார்க்கும் போது நிச்சயம் நன்றாக இருக்கும் என்றும் கூறி இருந்தார்.
அதே போல, ஆரம்பத்தில் வெளியான போஸ்டர்கள் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போக, கடந்த சில தினங்களில் வந்த போஸ்டர்கள் ரசிகர்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது. அதே போல, கோட் படத்தின் மீதிருந்த விமர்சனங்கள் அனைத்தும் ட்ரைலர் ரிலீசான பின்னர் சுக்கு நூறாக உடைந்து போனது.
முதல் திரைப்படத்தில் நடித்த விஜய் லுக் முதல் தற்போதுள்ள லுக் வரை நிறைய விஷயங்கள் கோட் படத்தில் இடம்பெற்றுள்ளது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. அதே போல, தந்தை மற்றும் மகன் விஜய் ஆகியோருக்கு நடுவே வேறு சில இளம் வயது விஜய்யின் லுக்கும் படத்தில் வருவதால் ஏதோ சயின்ஸ் பிக்ஷன் கதையம்சமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ட்ரைலரில் வரும் காட்சிகள் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளதால் இதுவரை எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்த ரசிகர்கள், தற்போது ரிலீஸ் நாளை எதிர்நோக்கியும் காத்திருக்க தொடங்கி விட்டனர். இதனிடையே, ட்ரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அப்போது பத்திரிகையாளர்கள் கேட்ட பல சர்ச்சை கேள்விகளுக்கு கொஞ்சம் கூட டென்சன் ஆகாமல் மிக கூலாக பதில் சொல்லி அசர வைத்திருந்தார் வெங்கட் பிரபு. இதனிடையே, அஜித் ரசிகர்கள் குறித்து ஒருவர் கேட்ட கேள்விக்கு வெங்கட் பிரபு சொன்ன பதில், இணையத்தில் வைரலாகி வருகிறது.
மங்காத்தா படத்தில் நடிகர் அஜித் குமார் மது அருந்தி விட்டு, இனிமேல் சத்தியமாக குடிக்கவே கூடாது என கூறும் வசனம் வரும். இதே டயலாக் விஜய் பேசுவது போல கோட் படத்தின் ட்ரைலரில் வருகிறது. இது பற்றி கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் ஒருவர், “விஜய் அப்படி மங்காத்தா படத்தின் வசனத்தை பேசியது அஜித் ரசிகர்களை சமரசம் செய்வதற்காக வைக்கப்பட்டதா?” என சர்ச்சைக்குரிய கேள்வியை முன் வைத்திருந்தார்.
“அது வெங்கட் பிரபு டயலாக். அஜித், விஜய் என அவங்க ரெண்டு பேரையும் நான் தான் சொல்ல வைத்தேன். அது அஜித் சாராக பேசவில்லை. அவரை நான் தானே சொல்ல வைத்தேன்” என வெங்கட் பிரபு பதிலடி கொடுத்திருந்தார்.