வைகைப் புயல் வடிவேலுவின் எத்தனையோ காமெடிகள் மனதை விட்டு அகலாமல் இருப்பதற்குக் காரணம் அவருடைய மேனரிஸமும், மதுரை வட்டார வழக்கும் தான். இப்படி பார்த்தவுடனே குபீர் சிரிப்பினை வரவழைக்கும் பல காமெடிகள் அவரது பிளே லிஸ்ட்டில் இருந்தாலும் ஆல்டைம் காமெடியாக எத்தனை முறை பார்த்தாலும், எப்போது பார்த்தாலும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காமெடிதான் பாஞ்சாலங்குறிச்சி பட காமெடி.
இயக்குநராக சீமானின் முதல்படம் இதுவாகும். 1996-ல் வெளிவந்த இந்தப் படத்தில் பிரபு, மனோபாலா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆனது. உன் உதட்டோர சிவப்பா.. என்ற மெலடி பாடல் இன்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் டிரெண்டிங்கில் இருக்கும் பாடலாக விளங்குகிறது. இப்படி பாடல்கள் எவ்வளவு ஹிட்டானதோ அதே அளவு காமெடியும்ஹிட் ஆகி இன்றும் வயற்றைப் பதம் பார்க்கும்.
இந்தப் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்து. திரைத்துறையில் வசந்த், சீமான் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து பின்னர் படங்கள் இயக்கி அதன்பின் முழுநேர நடிகரானார். சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் இவரை பிரபலப்படுத்தியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்நிலையில் பாஞ்சாலங்குறிச்சி படத்தில் வரும் காமெடி டிராக்குகளை எழுதியது மாரிமுத்து தான் என்பது யாரும் அறியா விஷயம். குறிப்பாக படத்தில் இடம்பெறும் பாய் காமெடியை ரசிக்காதவர்களே கிடையாது. இந்த சீன் உருவாக்குவதற்கு மாரிமுத்து தனது சொந்த ஊரில் இதே போன்ற ஒரு குணாதிசயம் கொண்ட சற்று மனநலம் குன்றிய ஒரு மூதாட்டியை மனதில் வைத்துத்தான் எழுதினாராம்.
கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தாலும்.. நூலிழையில் உயிர் தப்பிய ராமராஜன்.. யாரிடமும் சொல்லாத ரகசியம்
மேலும் அந்த சீனில் வடிவேலு குடித்துவிட்டு வந்து பாயை எடுக்கும்போது அதனை மாறி மாறி விரிக்கும் போது அது சுருண்டு கொண்டே இருக்கும். இப்படி சுருண்டு கொண்டே இருக்க ஒரு சமயத்தில் மொத்தமாக மேலிருந்து கீழாக போட்டு அப்படியே விழுந்து மூக்கு உடைவது போன்று காமெடி இருக்கும்.
முதலில் இது போன்று பாய் சுருள வில்லையாம். இதனால் மாரிமுத்து அந்த ஓலைப் பாயை நன்கு கருப்பட்டியில் ஊற வைத்து அதன்பிறகு சுருட்டி வைக்க அப்படியே நின்று கொண்டது. அதன்பிறகு விரித்தாலும் மீண்டும் சுருண்டுள்ளது. இப்படி தான் கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் கற்றுக் கொண்ட சில விஷயங்களை மனதில் வைத்து இதையே அப்படியே காமெடியாக மாற்றினாராம் மாரிமுத்து. அதன்பிறகு சீமான் படத்தில் சேர்க்க இந்தக் காமெடி வடிவேலுவின் கிளாசிக் காமெடிகளில் ஒன்றாக புகழ்பெற்றது.