தமிழ்சினிமாவில் முதல் பாகம் விறுவிறுப்பாக இருக்கும்போது தான் படத்தின் 2ம் பாகத்தை எடுப்பார்கள். பெரும்பாலான படங்களுக்கு முதல் பாகத்தைப் போல 2ம் பாகத்திற்கு வரவேற்பு இருக்காது. ஆனாலும் அவ்வப்போது 2ம் பாகம் படங்கள் வந்த வண்ணம் தான் உள்ளன.
அந்த வகையில் விரைவில் வெளியாக உள்ள சில 2ம் பாக படங்களைப் பற்றி பார்ப்போம். இவை வெற்றி பெறுமா என்பது ரசிகர்களின் கைகளில் தான் உள்ளது. ஆரம்பிக்கலாமா….!
தலைநகரம் 2

2006ல் சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி. நடிப்பில் தலைநகரம் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது தலைநகரம் 2 களம் இறங்கியுள்ளது.
வன்முறைக்காட்சிகளின் கூடாரமாக வந்துள்ளது தலைநகரம் 2. சுந்தர்.சி., பாலக் லால்வாணி, யோகிபாபு, தம்பி ராமையா. ஆயிரா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் பின்னி எடுக்கிறார் சுந்தர்.சி. படத்தை வி.இசட்.துரை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
டிமான்டி காலனி 2

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் டிமான்டி காலனி 2. இதன் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரே அறைக்குள் இருந்து திகில் படத்தை இவ்வளவு தத்ரூபமாக யாரும் எடுத்து இருக்க மாட்டார்கள்.
அதன் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் முதல் பாகம் 2015ல் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியானது. இந்தப் படத்திலும் அருள்நிதி தான் ஹீரோவாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரமுகி 2

2005ல் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம் சந்திரமுகி. திகிலும், கமர்ஷியலும் சரிவிகிதத்தில் கலந்து எடுக்கப்பட்ட படம். ரசிகர்கள் மத்தியில் சக்கை போடு போட்டது. அப்போது பல தியேட்டர்களில் 200 நாள்களுக்கு மேல் ஓடி அபார வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது சந்திரமுகி 2 வெளியாக உள்ளது.
இதில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். ஆஸ்கர் நாயகன் கீரவாணி இசை அமைக்கிறார். கங்கனா ராணவத், ராதிகா, ஷ்ருஷ்டி டாங்கே, வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது.
புஷ்பா 2

சுகுமார் இயக்கத்தில் அக்ஷய்குமார், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்து வரும் படம் புஷ்பா 2.
சுகுமார் இயக்கத்தில் 2021ல் அல்லு அர்ஜூன், பகத்பாசில், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்து வெற்றி பெற்ற படம் புஷ்பா. இதன் தொடர்ச்சியாக தற்போது புஷ்பா 2 வெளியாக உள்ளது.
இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் 1996ல் வெளியான படம் இந்தியன். ஊழலுக்கு எதிராக வெளியான இந்தப் படம் அப்போது பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. கமல், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, நெடுமுடி வேணு, கவுண்டமணி, செந்தில் நடித்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருந்தார். படத்தில் இந்தியன் தாத்தா வர்மக்கலையில் அசத்தியிருப்பார்.
படத்தின் இறுதியில் இந்தியன் தாத்தாவுக்கு சாவே கிடையாது என்று சொல்லி முடித்திருப்பார். இப்போது அதன் தொடர்ச்சியாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது. கமல், காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத்திசிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


