விஜயகாந்த் தரப்பில் இருந்து அப்படி ஒரு பதில் வரும்னு நினைக்கல! தாணுவை சங்கடத்திற்கு ஆளாக்கிய கேப்டன்

By Staff

Published:

தமிழ் சினிமாவில் ஒரு புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் புரட்சிக் கலைஞரும் கேப்டனுமான விஜயகாந்த். கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் அடித்து மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த். மக்கள் மத்தியில் அவருக்கு என ஒரு தனி மரியாதையே இருந்து வந்தது. இப்போதும் இருக்கிறது .அதை அவருடைய மரணத்தில் நம்மால் அறிந்து கொள்ள முடிந்தது .

எம்ஜிஆருக்கு கிடைத்த அங்கீகாரமும் மரியாதையும் அவருக்கு அடுத்தபடியாக விஜயகாந்தின் மரணத்தில் தான் பார்க்க முடிந்தது. எப்பேர்ப்பட்ட கூட்டம்? மக்களின் அழுகுரல் என அனைத்து தரப்பினரையும் ஆச்சரியத்தில் விட்டுச் சென்றார் கேப்டன். சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஒரு பெரிய ஆளுமையாகவே இருந்து வந்தார். மனிதாபிமானம் உள்ள ஒரு நல்ல மனிதர், நல்ல நடிகர், அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் படைத்தவர்.

இப்படி பல நல்ல குணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நிலையில் விஜயகாந்தை பற்றி தாணு கூறிய ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது. 1990 ஆம் ஆண்டு விஜயகாந்த், அமலா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் புது பாடகன். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணுதான் இயக்கி தயாரிக்கவும் செய்தார். இந்த படத்திற்கு பிறகு தாணுவோடு இணைந்து விஜயகாந்த் படம் நடிக்கவே இல்லை.

அதற்கான காரணம் என்ன என்பதை தாணுவே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.விஜயகாந்தை பொறுத்த வரைக்கும் பொதுவாக ஒவ்வொரு வருடத்திற்கும் தாணுவுடன் இணைந்து எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விடுவாராம். அது அவர் சொன்னாலும் சரி சொல்லாவிட்டாலும் சரி வருடத்தில் ஒரு முறை தாணுவோடு இணைந்து படம் நடித்து விடுவாராம்.

அப்படித்தான் புது பாடகன் படம் முடிந்த பிறகு அடுத்த வருடத்திற்கான நான்கு படங்களின் கால்ஷீட் போடும் போது அதில் தாணுவின் பெயர் இல்லையாம். யாரெல்லாம் அடுத்த படங்களை பண்ணுகிறார்கள் என ஒரு உதவியாளர் விஜயகாந்திடம் சொல்ல உடனே விஜயகாந்த் ‘டேய் இதில் தாணு பேரே இல்லையாடா? வந்து கேட்கப்போறாரு’ என கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த உதவியாளர் ‘கேட்கட்டும் விஜி.. அண்ணணுக்கு இல்லைனா சொல்லப் போறோம். அண்ணன் வந்து கேட்கட்டும்’ என தாணுவை பற்றி சொல்லியிருக்கிறார். அதற்கு விஜயகாந்த் ‘அப்படியாடா? ’ என சொல்லிவிட்டு சாதாரணமாக இருந்து விட்டாராம். அந்த நேரத்தில் விஜயகாந்த் ராவுத்தர் சொல்பேச்சைக் கேட்டுத்தான் நடப்பார்.

இந்த சம்பவத்தை அப்படியே அந்த உதவியாளர் தாணுவிடம் வந்து சொல்ல உடனே தாணு ‘வருஷத்திற்கு ஒரு படம் தரேனு சொல்லிட்டு இப்போ நான் வந்து கேட்கனும்னா நான் கேட்க மாட்டேன்’ என அதிலிருந்தே விஜயகாந்தை வைத்து படம் பண்ணவே இல்லை என்று அந்த வீடியோவில் தாணு கூறியிருக்கிறார்.