எம்.ஜி.ஆர், சிவாஜிக்குப் பிறகு ரஜினி, கமல் 90-களில் கலக்கிக் கொண்டிருந்த காலம் அது. ஒருபக்கம் மோகன், ராமராஜன், பிரபு, கார்த்திக், முரளி, விஜயகாந்த் என வரிசையாக ஹிட் கொடுத்துக் கொண்டிருக்க மறுபுறம் மீசை கூட முளைக்காத விடலைப் பையனாக அறிமுகமானார் பிரசாந்த்.
நடிகரும், இயக்குநருமான தியாகராஜனின் மகனான பிரசாந்த் ஆரம்பத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தந்தையும் சினிமாத் துறையில் இருந்ததால் வாய்ப்புகள் வந்தனவாம். ஆனால் தியாகராஜனுக்கோ பிரசாந்த்தை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லையாம். அவரை டாக்டருக்குப் படிக்க வைக்க ஆசைப்பட்டாராம்.
ஆனால் விதி பிரசாந்தின் வாழ்க்கையில் விளையாடியது. எதை அவர் தந்தை தியாகராஜன் வேண்டாம் என்று நினைத்தாரோ அதே சினிமா துறையிலேயே காலடி எடுத்து வைத்தார் பிரசாந்த். அவர் படிக்கும் போது பிரதாப் போத்தன், பாலுமகேந்திரா உள்ளிட்ட பல டைரக்டர்கள் அவரை நடிக்க வைக்க அணுக இறுதியில் சத்யராஜ் தியாகராஜனை சம்மதிக்க வைத்து பிரசாந்தை நடிக்க வைத்தாராம். அப்படி உருவானது தான் வைகாசி பொறந்தாச்சு என்ற சூப்பர் ஹிட் படம்.
1990-ல் ராதா பாரதி இயக்கிய இப்படம் தேவாவின் இசையால் ஹிட் ஆனது. இப்படத்தின் பாடல்கள் இன்றும் நம்மை மெய்மறந்து கேட்க வைக்கும் தேனிசை தென்றல்கள். மொத்தமே 18 நாட்கள்தான் இப்படத்திற்காக பிரசாந்த் ஷுட்டிங் சென்றாராம். அதன்பிறகு பாலுமகேந்திரா இயக்கிய வண்ண வண்ண பூக்கள் திரைப்படம் பிரசாந்துக்கு சினிமாவில் நிரந்தர இடம்கொடுத்தது.
காமெடிப் படம் தான்: ஆனா காட்சிக்குக் காட்சி இப்படி ஒரு கருத்தா? 1941-ல் வியக்க வைத்த தமிழ்ப்படம்
ஆர்.கே. செல்வமணி இயக்கிய செம்பருத்தி படம் பிரசாந்தை பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தியது. செம்பருத்தி படப் பாடல்கள் இன்றும் கிராமங்களிலும், பேருந்துகளிலும் ஒலிக்கும் சாகா வரம் பெற்ற கானங்கள். இவ்வாறு தனது நடிப்புத் திறமையை மெருகேற்றிய பிரசாந்த் தொடர்ந்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
இவர் பெண் வேடம் தரித்து நடித்த ஆணழகன் படம் இன்றும் பெண் வேடம் தரித்து நடிக்கும் நாயகர்களுக்கு சவால் விடும் கதாபாத்திரமாக அமைகிறது எனலாம். இதனையடுத்து பிரசாந்த் டாப் ஸ்டார் நாயகனாக மாறினார். அஜீத்துடன் கல்லூரி வாசல் படத்தில் நடித்தார். பின் முன்னணி இயக்குநர்கள் படங்களில் ஹீரோவாக நடித்த இவருக்கு ஜீன்ஸ் படம் உலகம் முழுக்க இவரது நடிப்பை கொண்டு சேர்த்தது.
அதன்பின் தொடர்ந்து நடித்து வந்தவர் 2010-க்குப் பிறகு சரியான கதைக்களங்கள் இன்றி தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்தார். தற்போது அந்தகன், தளபதி 68 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.