டாப் ஹீரோக்கள் இயக்கிய திரைப்படங்கள் ஒரு பார்வை!

By Velmurugan

Published:

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் முதல் கமலஹாசன் வரை பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் சில திரைப்படங்களை மட்டுமே அவர்கள் இயக்கியுள்ளனர். அப்படி டாப் ஹீரோக்கள் இயக்கிய திரைப்படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் மொத்தம் மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதில் 1958 ஆம் ஆண்டு 18 லட்ச ரூபாய் செலவில் முதன்முதலில் இயக்கி தயாரித்த திரைப்படம் நாடோடி மன்னன். இந்த படத்தில் பி. பானுமதி, எம். என். ராஜம், பி. சரோஜாதேவி, எம். என். நம்பியார், பி. எஸ். வீரப்பா, எம். ஜி. சக்கரபாணி, டி. கே. பாலச்சந்திரன், சந்திரபாபு என பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். இரண்டாவது திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன்.1973 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் சொந்தமாக தயாரித்து இயக்கிய இரண்டாவது திரைப்படம், இந்த படத்தில் எம்ஜிஆர் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். எம்ஜிஆர் இயக்கிய மூன்றாவது திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். 1978 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் நடிகர் எம் ஜி ஆர் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்ற பின் திரையிடப்பட்டது.

நடிகர் ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே திரைப்படம் இதயமலர். 1976 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கமல்ஹாசன், சுஜாதா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

அடுத்ததாக நகைச்சுவை நடிகர் என் எஸ் கிருஷ்ணன் இயக்கிய படங்கள் பணம், மணமகள். இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் கலைஞர் வசனம் எழுதியுள்ளார். அதைத்தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சந்திரபாபு இயக்கிய திரைப்படம் தட்டுங்கள் திறக்கப்படும். 1966 ஆம் ஆண்டு திரில்லர் திரைப்படமாக இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. மேலும் இந்த படத்தில் சாவித்ரி கணேஷ் , கே.ஆர்.விஜயா , ஷோபா, சந்திரபாபு மற்றும் மனோகர் ஏவிஎம் ராஜன் , சோ மற்றும் எம்ஆர்ஆர் வாசு பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். அடுத்ததாக நகைச்சுவை நடிகர் நாகேஷ் இயக்கிய திரைப்படம் பார்த்த ஞாபகம் இல்லையோ. 1985 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் ஆனந்த் பாபு இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்கள்.

அடுத்து எஸ். எஸ். ராஜேந்திரன் இயக்கிய முதல் திரைப்படம் தங்க ரத்தினம். கேவி மகாதேவன் இசையில் உருவான இந்த திரைப்படம் 1960 ஆம் ஆண்டு வெளியானது. எஸ் எஸ் ஆர் இயக்கத்தில் இரண்டாவதாக வெளியான திரைப்படம் மணிமகுடம். 1966 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் இவற்றை கருணாநிதி எழுதி இருப்பார். மூன்றாவதாக இயக்கிய திரைப்படம் அல்லி. 1964ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது.

எம்ஜிஆருக்கு மதுவை ஊற்றிக் கொடுத்த இயக்குனர்! திறமையாக சமாளித்த மக்கள் திலகம்!

உலக நாயகன் கமலஹாசன் இயக்கிய திரைப்படங்கள் ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் 1 மற்றும் விஸ்வரூபம் 2. நடிகர் சரத்குமார் இயக்கிய ஒரே திரைப்படம் தலைமகன். 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார். நடிகர் சத்யராஜ் இயக்கிய ஒரே திரைப்படம் வில்லாதி வில்லன். இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜ் மூன்று வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விஜயகாந்த் இயக்கிய ஒரே திரைப்படம் விருதகிரி.2010 ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்தின் அதிரடி திரைப்படம் ஆக இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது.

அடுத்ததாக நகைச்சுவை நடிகர் வி கே ராமசாமி இயக்கிய திரைப்படம் 1983இல் ஜோடி புறா. நடிகர் சோ இயக்கிய திரைப்படங்கள் முகமது பின் துக்ளக், உண்மையே உன் விலை என்ன, மிஸ்டர் சம்பத், யாருக்கும் வெட்கமில்லை, சம்போ சிவ சம்போ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.