டிஎஸ்பி என்று அழைக்கப்படும் தேவிஸ்ரீ பிரசாத் 21 ஆண்டுகளுக்கு மேலாக பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பணியாற்றுகிறார். தெலுங்கு சினிமாவில் தேவிஸ்ரீ பிரசாத் முன்னணி இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘துள்ளல் இசையின் நாயகன்’ என்று அழைக்கப்படும் தேவிஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் எனர்ஜி தருபவையாக இருக்கும். இவரின் தந்தை தெலுங்கு சினிமாவின் பிரபல திரைக்கதையாசிரியர் ஆவார். தனது 19 வது வயதிலேயே இசை பயணத்தை ஆரம்பித்து இசையமைப்பாளராக அறிமுகமானார்.
தமிழில் 2002 ஆம் ஆண்டு விஜய் நடித்த ‘பத்ரி’ திரைப்படத்தில் இசையமைத்து அறிமுகமானார். படங்களுக்கு இசையமைப்பது மட்டுமல்லாமல் தனது சொந்த குரலில் பாடல்களும் பாடியுள்ளார். பாடலாசியராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்தி படங்களிலும், ஆல்பம் பாடல்களிலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.
மழை, சச்சின், இனிது இனிது, திருப்பாச்சி, மாயாவி, ஆறு, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், வில்லு, சிங்கம், கந்தசாமி, குட்டி, மன்மதன் அம்பு, வேங்கை, அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, வீரம், பிரம்மன், புலி, சாமி 2 உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தார். தற்போது மிக நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல யூ-டியூப் சேனல் தேவிஸ்ரீ பிரசாத் அவர்களுக்கு ரசிகர்கள் விரும்பும் இசையமைப்பாளர் என்ற விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. அதைப் பெற்றுக் கொண்ட பின் மேடையில் பேசிய தேவிஸ்ரீ பிரசாத், இந்த வருடம் தமிழில் நிறைய படங்கள் பண்ணுகிறேன். தமிழ் மக்கள் என் மனதிற்கு நெருக்கமானவர்கள். அதே போல் சென்னையில் எனது மியூசிக் கான்செர்ட் நடத்தவும் பிளான் செய்து வருகிறோம். அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம். கண்டிப்பாக அனைவரும் கலந்துக் கொள்ளுங்கள். நம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆடுவோம், படுவோம், கொண்டாடுவோம் என்று பேசியுள்ளார்.