பப்லூ பிருத்விராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் ஆவார். குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் சினிமாவில் பணியாற்றுபவர் பிருத்விராஜ்.
1970களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் பிருத்விராஜ். 1979 ஆம் ஆண்டு ‘நான் வாழவைப்பேன்’ திரைப்படத்தில் ‘பப்லூ’ என்ற குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானதால் அந்தப் பெயரையே தனது பெயருக்கு முன்னால் வைத்துக் கொண்டார் பிருத்விராஜ்.
1980களில் குறைந்த பட்ஜெட் மலையாள படங்களிலும் தமிழ் படங்களிலும் நடித்தார் பிருத்விராஜ். 1990 களின் ஆரம்பத்தில் ‘தாய் மனசு’ படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் வரும் ‘தூதுவளை இலை அரைச்சு’ இன்றளவும் பிரபலமான பாடல் ஆகும்.
அஜித் நடித்த ‘அவள் வருவாளா’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டைப் பெற்றார் பிருத்விராஜ். பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரைக்குள் நுழைந்தார். ‘வாணி ராணி’, ‘மர்ம தேசம்’ போன்ற தொடரில் நடித்து பிரபலமானார். விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது படங்களில் நடித்து வருகிறார் பிருத்விராஜ்.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட பிருத்விராஜ், தனது சினிமா கேரியரைப் பற்றி பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறியது என்னவென்றால், என் கேரியரில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்னவென்றால், வாணி ராணி சீரியலில் ராதிகாவிற்கு கணவனாக நடித்தது தான். அதிலிருந்து தான் என்னை கிழவனு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார் பப்லூ பிருத்விராஜ்.