சேரன் தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். மதுரைக்கு அருகில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவர் சேரன். திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டு சென்னைக்கு வந்தவர்.
ஆரம்பத்தில் திரையுலகில் தயாரிப்பு மேலாளராக தனது பணியை தொடங்கியவர் சேரன். பின்னர் ‘புரியாத புதிர்’ படத்தில் கே. எஸ். ரவிக்குமார் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ போன்ற திரைப்படங்களில் கே. எஸ். ரவிக்குமார் அவர்களுடன் இணை இயக்குனராக பணியாற்றினார்.
1997 ஆம் ஆண்டு ‘பாரதி கண்ணம்மா’ திரைப்படத்தை இயக்கியதன் வாயிலாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து பொற்காலம் ( 1997), தேசிய கீதம் (1988), வெற்றிக் கொடி கட்டு (2000), பாண்டவர் பூமி (2001), ஆட்டோகிராப் (2004) போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார் சேரன்.
குடும்பங்களை மையமாக வைத்து கிராமங்களைச் சார்ந்த படங்களை எடுப்பதில் வல்லவர் சேரன். இவர் இயக்கிய திரைப்படங்களில் மிக முக்கியமானவை வெற்றிக் கொடி கட்டு, தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் ஆகும். இந்தப் படங்களுக்காக நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும் ஐந்து முறை தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் வென்றவர் சேரன்.
அதில் வெற்றிக் கொடி கட்டு திரைப்படம் உருவான விதம் பற்றிய சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் சேரன். அவர் கூறியது என்னவென்றால், பார்த்திபன், முரளி அவர்களை முன்னணி கதாபாத்திரத்தில் வைத்து, வடிவேலுவை காமெடியனாக வைத்து ஒரு கதையை உருவாக்க சொன்னார்கள். நீங்க நம்பமாட்டீங்க, இருட்டு அறையில் பதினைந்தே நாட்களில் உருவானது தான் வெற்றிக் கொடி கட்டு திரைப்படம். ஆனால் அந்தப் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று, வெற்றிப் பெற்று, எனது படைப்புகளில் சிறப்பான ஒன்றாக ஆனது என்று பகிர்ந்துள்ளார் சேரன்.