வெற்றிமாறன் தமிழ் திரைப்பட பிரபல முன்னணி இயக்குனர் ஆவார். 1999 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘காதல் நேரம்’ என்ற நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணியாற்றி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். பின்னர் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
2007 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை வைத்து ‘பொல்லாதவன்’ என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே நல்ல விமர்சனங்களை வெற்றிமாறனுக்கு பெற்றுத் தந்தது. அதற்குப் பின்பு 2011 ஆம் ஆண்டு ‘ஆடுகளம்’ படத்தை இயக்கினார். நடிகர் தனுஷ் இந்த படத்தின் நாயகனாக நடித்திருந்தார்.
‘ஆடுகளம்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் ஆகிய விருதுகளைப் பெற்றுத் தந்தது. மொத்தம் இந்த படத்திற்கு ஆறு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. அதை தொடர்ந்து ‘விசாரணை’, ‘வட சென்னை’ போன்ற வெற்றிப் படங்களையும் இயக்கியுள்ளார் வெற்றிமாறன்.
அதேபோல் கடந்த ஆண்டு வெற்றிமாறன் நகைச்சுவை நடிகர் சூரியை நடிகராக அறிமுகம் செய்து ‘விடுதலை பாகம் 1’ திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகி இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்று மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நல்ல விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் தற்போது நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறன் விடுதலை ஷூட்டிங்கில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால், விடுதலை ஷூட்டிங்கில் ட்ரைன் கம்பார்ட்மெண்டில் இருந்து பாலத்தில் 120 அடியில் இருந்து விழுவது போல் காட்சிப்படுத்த வேண்டும் என்று 15 நாட்கள் ரிஹர்சல் எடுத்தோம். அதற்கு நிறைய செலவு ஆகும் அந்த காட்சியை நீக்கிவிடலாம் என்று நினைத்த போது தயாரிப்பாளர் எடுங்க பாத்துக்கலாம் என்று கூறினார்.
அதற்காக செட் அப் மட்டுமே இரண்டு மாதங்களாக உருவாக்கினோம். அந்த சீன் எடுக்கும் பொழுது 120 அடியில் இருந்து கயிறு கட்டி ஸ்டாண்ட் ஆர்ட்டிஸ்ட் கீழே விழுவார். அப்படி ஷாட் எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்து நடந்து அந்த ஸ்டாண்ட் ஆர்ட்டிஸ்ட் இறந்து விட்டார். அந்த ஸ்பாட்டில் நாங்கள் இல்லை. என்ன நடந்தது, யார் மேல் தவறு, எப்படி இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் என்று எங்களுக்கு தெரியவில்லை. அந்த சம்பவம் விடுதலை படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மறக்க முடியாத வலியை ஏற்படுத்திவிட்டது என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார் வெற்றிமாறன்.