தமிழ்சினிமா உலகில் அதிக கருவிகளைக் கொண்டு இசை அமைத்த பாடல் எது? குறைந்த கருவிகளைக் கொண்டு இசை அமைத்த பாடல் எதுன்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
புதிய பறவை படத்தில் சிவாஜி பாடுவதாக வந்த சூப்பர்ஹிட் பாடல் எங்கே நிம்மதி எங்கே நிம்மதி… அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்ற பாடல். அந்தப் பாடல் தான் மிக அதிகமான இசைக்கலைஞர்களோடு உருவாக்கப்பட்ட பாடல்னு சொல்லலாம். மிகக்குறைவான இசைக்கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பாடல்னா பொம்மை திரைப்படத்தில் எஸ்.பாலசந்தரின் இசையில் பதிவு செய்யப்பட்ட ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்ற பாடல்தான்.
கே.ஜே.யேசுதாஸ்தான் இந்தப் பாடலைப் பாடி இருக்கிறார். அவரைப் பொருத்தவரைக்கும் அதுதான் தமிழ்சினிமாவில் பாடிய முதல் பாடல். அந்தப் பாடலுக்காக இசை அமைப்பாளர் எஸ்.பாலசந்தர் பயன்படுத்தியது புல்புல்தாரா என்ற இசைக்கருவியை மட்டும்தான் என்கிறார் சித்ரா லட்சுமணன்.
1964ல் சிவாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில் தாதா மிராசி இயக்கிய படம் புதிய பறவை. சிவாஜி, சரோஜாதேவி உள்பட பலர் நடித்துள்ளனர். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை அமைத்துள்ளனர். இந்தப் படத்தில் அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட். எங்கே நிம்மதி, சிட்டுக்குருவி, ஆஹா மெல்ல நட, உன்னை ஒன்று கேட்பேன், பார்த்த ஞாபகம் ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதே 1964ல் வீணை எஸ்.பாலசந்தர் தயாரித்து இயக்கி இசை அமைத்து நடித்த படம் பொம்மை. இந்தப் படத்தில் அவருடன் இணைந்து எல்.விஜயலட்சுமி, வி.எஸ்.ராகவன், வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.என்.லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் தான் யேசுதாஸ் பாடிய நீயும் பொம்மை பாடல் வருகிறது.