சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட் பரபரப்பான பல திருப்பங்களுடன் அரங்கேறியுள்ளது. குறிப்பாக ரோகிணி தனது உண்மை முகம் தெரிந்த பிறகும் ஆவேசமாக மீனா மற்றும் சுருதியிடம் சவால் விடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. “நான் என் கணவருடன் வாழ முடியாத நிலையில் இருக்கும்போது, நீங்கள் மட்டும் எப்படி சந்தோஷமாக வாழ்கிறீர்கள் என்று பார்க்கிறேன்” என ரோகிணி மிரட்டல் விடுக்க, அதனை பார்த்த மீனா, “உதவி செய்ய மாட்டோம் என்று சொன்னவுடன் ரோகிணி எப்படி தனது சுயரூபத்தை காட்டுகிறார் பார்த்தாயா?” என்று சுருதியிடம் கூறி வருத்தப்படுகிறார். ரோகிணியின் இந்த வன்மம் வரும் நாட்களில் அண்ணாமலை குடும்பத்திற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தும் என்பது இந்தத் தருணத்தில் தெளிவாக தெரிந்தது.

இதனை தொடர்ந்து, முத்துவும் அண்ணாமலையும் வீட்டிற்கு திரும்பிய போது, அங்கு திடீரென பாட்டி இருப்பதை பார்த்து இருவரும் பேரதிர்ச்சி அடைகின்றனர். மீனாவுக்கு விபத்து ஏற்பட்டு அடிபட்ட விஷயத்தை தன்னிடம் ஏன் மறைத்தீர்கள் என்று இருவரையும் பாட்டி கடுமையாக சாடுகிறார். அவர்கள் இருவரும் மழுப்பலாக பதில் கூற முயலும்போது, ரோகிணியின் ஏமாற்று வேலைகளும் தனக்கு தெரியும் என்றும், அதையும் ஏன் மறைத்தீர்கள் என்றும் பாட்டி கோபப்படுகிறார். அப்போது குறுக்கிட்ட விஜயா, “நான் தான் அத்தையை வர சொன்னேன், மனோஜின் எதிர்காலத்தை பற்றி அத்தை தான் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என்று தனது தரப்பு நியாயத்தை கூறுகிறார். ஆனால் பாட்டியோ, “இதில் நான் முடிவெடுக்க எதுவும் இல்லை, மனோஜ் தான் தன் வாழ்க்கையை பற்றி தீர்மானிக்க வேண்டும்” என்று கூறி அங்கிருந்து கிளம்புகிறார். செல்லும் முன் முத்துவிடம், “மீனா இந்த வீட்டுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம், அவளை நன்றாக பார்த்துக்கொள்” என்று அறிவுறுத்துகிறார். முத்துவும் மீனாவின் அருமையை புரிந்து கொண்டதாக பதிலளிக்கிறார்.
அதற்கு பின் வரும் காட்சிகள் சற்று இழுவையாகவும் அதேசமயம் கலகலப்பாகவும் இருந்தன. மீனாவை குஷிப்படுத்த முத்து தானே முன்வந்து அல்வா கிண்ட போவதாக சொல்லி சமையலறையில் ரகளை செய்கிறார். கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் வரை தேவையற்ற நகைச்சுவை மற்றும் சமையல் குளறுபடிகள் நீடித்தாலும், அதன் இறுதியில் முத்து மற்றும் மீனாவுக்கு இடையிலான அழகான ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. இத்தனை பிரச்சனைகளுக்கு இடையிலும் இந்த தம்பதிகளின் அன்பு மாறாமல் இருப்பது சீரியலின் சுவாரசியத்தை கூட்டுகிறது. ஆனால், மறுபுறம் மனோஜின் வாழ்க்கை பெரும் போராட்டமாக தொடர்கிறது.

மறுநாள் காலை, ரோகிணியின் நினைவுகளில் மூழ்கி தவிக்கும் மனோஜை கண்ட விஜயா, இனி அவளின் எந்த அடையாளமும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று கூறி ரோகிணியின் புகைப்படத்தை உடைத்து, அந்த படத்தை நெருப்பில் எரிக்கிறார். அந்த சமயத்தில், மனோஜிற்கு முப்பது லட்சம் ரூபாய் கடன் கொடுத்த ஃபைனான்சியர் வீட்டிற்கு வந்து பெரும் ரகளையில் ஈடுபடுகிறார். “நான் மனோஜை நம்பி பணம் தரவில்லை, ரோகிணி புத்திசாலி என்பதால் தான் கொடுத்தேன். மனோஜ் ஒரு ஜீரோ, ஒன்றுக்கும் உதவாத படித்த முட்டாள்” என்று அவர் கேவலமாக பேசுகிறார். இதை கேட்டு ஆத்திரமடைந்த விஜயா, “என் மகன் பணத்தை திருப்பித் தந்துவிடுவான், அதற்கு நான் உத்தரவாதம்” என்று கூறி, யோசிக்காமல் அந்த பணத்திற்கு பொறுப்பேற்று பத்திரத்தில் கையெழுத்திட முடிவு செய்கிறார். இதை கண்டு குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர்.

இந்த திருப்பத்தின் பின்னணியில் சிந்தாமணியின் மிகப்பெரிய சதி இருக்கலாம் என்று பலமாக எதிர்பார்க்கப்படுகிறது. சிந்தாமணி தான் அந்த ஃபைனான்சியரை அனுப்பி விஜயாவை பொறியில் விழ வைத்துள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை, மனோஜ் வாங்கிய முப்பது லட்சம் கடனை அடைக்க சிந்தாமணி விஜயாவுக்கு பண உதவி செய்வது போல நடித்து, அந்த பணத்தைத் திரும்ப கேட்க முடியாத சூழலில் விஜயாவின் வீட்டை தன் வசப்படுத்த முயலலாம். விஜயா எப்போதும் “இது என் அப்பா எனக்குக் கொடுத்த சொத்து” என்று பெருமையாக கூறி வரும் நிலையில், அந்த வீட்டிற்கே இப்போது ஆபத்து வந்துள்ளது. விஜயாவின் இந்த அவசர கையெழுத்து, அண்ணாமலை குடும்பத்தை நடுத்தெருவிற்கு இழுத்து வரும் அபாயத்தை கொண்டுள்ளது.

எதிர்கால எபிசோடுகளில், இத்தனை சிக்கல்களையும் முத்து மற்றும் மீனா எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதுதான் கதையின் முக்கிய அம்சமாக இருக்கும். விஜயா தன் வீட்டை இழக்கும் நிலைக்கு சென்றாலும், முத்து தன் புத்திசாலித்தனத்தால் சிந்தாமணியின் சதித்திட்டங்களை முறியடித்து வீட்டை மீட்டு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், மனோஜிற்கு மற்றொரு திருமணத்தை நடத்தி வைக்க விஜயா எடுக்கும் முயற்சிகளும், ரோகிணி வெளியே இருந்து செய்யும் சதிகளும் சீரியலை இன்னும் விறுவிறுப்பாக்கும். ஒட்டுமொத்தத்தில், அண்ணாமலை குடும்பத்தின் நிம்மதியை சிதைக்கும் வகையிலான சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேற போவது உறுதி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
