2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி சி.வி. குமார் தயாரிப்பில் ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் ஜனனி நடித்த தெகிடி படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. துப்பறியும் கதை அம்சத்தை கொண்ட இப்படத்தில் ஜெயப்பிரகாஷ் , காளி வெங்கட், ஷாலு ஷம்மு மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் நிவாஸ் கே பிரசன்னா ஆவார்.
இப்படத்தில் அமைந்திருந்த விண்மீன் விதையில் மற்றும் யார் எழுதியதோ என்ற இரு பாடல்கள் மெஹாகிட் என்றே சொல்லலாம். கவிஞர் கபிலன் இந்த இரு பாடல்களையும் எழுதியுள்ளார். அருமையான பாடல் வரிகளின் மூலமாகவே காதல் ரசத்தை பொழிந்து இருப்பார்.
சைந்தவி பிரகாஷ் மற்றும் அபே இணைந்து விண்மீன் விதையில் பாடலை பாடியுள்ளனர். இவர்கள் இருவரின் குரல் கேட்பதற்கு இனிமையாக மட்டுமல்லாமல் இந்தப் பாடலின் காட்சி அமைப்பும் கூட பச்சை பசேல் என்று கண்ணுக்கு இனிமையானதாகவும் இருக்கிறது. யார் எழுதியதோ என்ற பாடலை பாடிய சத்திய பிரகாஷின் குரல் உயிரைத் தொட்டு விட்டு திரும்புவது போல் இருக்கும்.
இப்படத்தின் இசைமட்டுமின்றி நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை ஜனனியின் எதார்த்தமான நடிப்பும் ஒன்றிணைந்து இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுத்து மிக அதிக லாபத்தை கொடுத்த படங்களில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம்.
நடிகர் அசோக் நல்லவனுக்கு தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக இந்த படம் அமைந்தது. தற்போது போர் தொழில், சபாநாயகன் மற்றும் ப்ளூ ஸ்டார் போன்ற பேக் டு பேக் ஹிட் படங்களை கொடுத்து அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் தன் கால் தடத்தை பதித்து விட்டார்.
தற்போது தெகிடி படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததால் அந்த படத்தைப் பற்றி அசோக் செல்வன் அது X தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் தெகிடி படத்தில் பணியாற்றியது நேற்று நடந்தது போல் இருப்பதாகவும், இப்படத்தின் பாகம் 2 பற்றிய அப்டேட்டுகள் விரைவில் வெளியாகலாம் என்று பதிவிட்டிருந்தார்.
முதல் பாகத்தில் பணியாற்றியவர்களே இரண்டாம் பாகத்திலும் பணியாற்ற உள்ளார்கள் என்று சில செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.