மலேசியாவின் கோலாலம்பூர் மண்ணில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஒரு சாதாரண சினிமா நிகழ்வாக இல்லாமல், ஒரு உணர்ச்சிகரமான வரலாற்று தருணமாகவே அமைந்தது. 33 ஆண்டுகால திரைப்பயணத்தில் தான் கட்டியெழுப்பிய சாம்ராஜ்யத்தை, மக்களின் நலனுக்காக துறக்கத் துணிந்த ஒரு நாயகனின் குரல் அங்கு ஒலித்தது.
“என் நெஞ்சில் குடியிருப்பவர்களே” என்று அவர் உரையை தொடங்கியபோது, மைதானத்தில் திரண்டிருந்த 75,000-க்கும் அதிகமான மக்களின் ஆரவாரம் மலேசியாவையே அதிர செய்தது. இது ஒரு நடிகருக்கான விடைபெறுதல் மட்டுமல்ல, ஒரு தலைவனுக்கான வரவேற்பு என்பதை அங்கிருந்த சூழல் உணர்த்தியது. கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் அல்லது தோனி ஓய்வு பெறும்போது ஏற்படும் அந்த ஒருவித வலி, இன்று விஜய் ‘இது எனது கடைசி படம்’ என்று சொல்லும்போது திரையுலகிலும் அவர் ரசிகர்களின் மனதிலும் எதிரொலிக்கிறது.
விஜய் தனது உரையில் கடந்து வந்த பாதையை மிகவும் உருக்கமாக பகிர்ந்து கொண்டார். தான் சினிமாவிற்கு வந்தபோது சந்தித்த விமர்சனங்கள், அவமானங்கள் மற்றும் தனது தோற்றம் குறித்து எள்ளிநகையாடப்பட்ட விஷயங்களை அவர் நினைவுகூர்ந்தார். ஆனால், முதல் நாளிலிருந்து இன்று வரை தன்னை தாங்கி பிடிக்கும் ஒரே கூட்டணி தனது ரசிகர்கள்தான் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
“தியேட்டர் வாசலில் எனக்காக நின்ற உங்களுக்காக, இனி உங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்பேன்” என்று அவர் கூறியது, அவர் அரசியலில் மேற்கொள்ளப்போகும் தீவிரமான பயணத்தை உறுதிப்படுத்தியது. 33 ஆண்டுகள் ரசிகர்கள் தனக்காக உழைத்ததற்கு பிரதிபலனாக, அடுத்த 30 ஆண்டுகளை அவர்களுக்காக அர்ப்பணிக்க போவதாக அவர் வழங்கிய வாக்குறுதி ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
விழாவில் பங்கேற்ற திரைத்துறை பிரபலங்கள் ஒவ்வொருவரும் விஜய்யுடனான தங்களின் நெகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, நடிகர் நாசர் தனது மகனின் உயிரை காப்பாற்றியவர் விஜய் என்று கூறியபோது ஒட்டுமொத்த அரங்கமும் கண் கலங்கியது. இயக்குனர் அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர் விஜய்யை ‘வேர்’ என்று வர்ணித்ததுடன், அவர் நடிப்பை விட்டு செல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அனிருத்தை ‘மியூசிக்கல் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்’ என்று விஜய் பாராட்டியதும், அவர்களின் கூட்டணி ‘ஜனநாயகன்’ படத்தில் மீண்டும் ஒரு மேஜிக் நிகழ்த்தியிருப்பதும் விழாவின் முக்கிய அம்சங்களாக இருந்தன. மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இந்த விழா இடம் பெற்றது, விஜய்யின் உலகளாவிய செல்வாக்கிற்கு ஒரு சான்றாக அமைந்தது.
அரசியல் ரீதியாக பல நுணுக்கமான தகவல்களை விஜய் இந்த மேடையில் நாசுக்காக வெளிப்படுத்தினார். “நான் எப்போது தனியாக வந்திருக்கிறேன்? நான் எப்போதும் ஒரு அணியாகத்தான் வந்திருக்கிறேன்” என்று கூறியதன் மூலம், தான் தனி ஆள் அல்ல, ஒரு மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி என்பதை உணர்த்தினார். அதே நேரத்தில், 2026 தேர்தலுக்கான கூட்டணி குறித்த கேள்விகளுக்கு “கூட்டணியோடுதான் வருவேன்” என்று பொடி வைத்துப் பேசியது, வரும் காலங்களில் தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழப்போவதைக் கோடிட்டு காட்டியது. மலேசிய அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நேரடி அரசியல் முழக்கங்களை தவிர்த்தாலும், அவரது ஒவ்வொரு சொல்லும் செயலும் ஒரு தெளிவான அரசியல் இலக்கை நோக்கியே இருந்தன.
இறுதியாக, தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் உடனான பிணக்குகளை மறந்து மேடையில் அவரை ஓடி சென்று கட்டிப்பிடித்த தருணம், ஒரு மகனாகவும் மனிதனாகவும் விஜய்யின் முதிர்ச்சியைக் காட்டியது. “பயணத்தின் முடிவு ஒரு நம்பிக்கையை உருவாக்கும்” என்ற இயக்குனர் ஹெச். வினோத்தின் வார்த்தைகளுக்கேற்ப, ‘ஜனநாயகன்’ திரைப்படம் விஜய்யின் சினிமா வாழ்க்கைக்கு ஒரு கௌரவமான நிறைவாகவும், தமிழகத்தின் தலைவிதியை மாற்றப்போகும் ஒரு புதிய தொடக்கமாகவும் இருக்கும் என நம்பப்படுகிறது. “கப்பு முக்கியம் பிகிலு” என்ற பாணியில், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய தனது பயணத்தில் அவர் மிகவும் உறுதியாக இருப்பதை மலேசிய மண்ணில் மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லி விடைபெற்றார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
