தமிழ் சினிமாவை நாம் வெளியே இருந்து பார்ப்பதற்கு ஒரு திரைப்படம் திரையில் வருகிறது என மட்டும் தெரிந்தாலும் அந்த ஷூட்டிங் ஸ்பாட் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் மிக அதிகமாக தான் இருக்கும். அந்த வகையில் ஒரு சம்பவம் பற்றி தான் பிரபல குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா, ஜில்லா பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சம்பவம் பற்றி அசத்தலான தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
நேசன் இயக்கத்தில் விஜய் மற்றும் மோகன்லால் ஆகிய இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்த திரைப்படம் தான் ஜில்லா. இவர்களுடன் மஹத், சம்பத், காஜல் அகர்வால், தம்பி ராமையா, சூரி உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்த நிலையில், கண்டாங்கி, ஜிங்குன மணி உள்ளிட்ட அனைத்து பாடல்களுமே பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தது.
டேய் ஷாருக் கான்
மேலும் பொங்கல் விருந்தாக வெளியான ஜில்லா திரைப்படமும் குடும்பத்தினர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற, கமர்ஷியல் ஹிட்டாகவும் இந்த தரப்பிடம் அமைந்திருந்தது. அப்படி ஒரு சூழலில் தான் ஜில்லா படத்தின் படப்பிடிப்புக்கு நடுவே அரங்கேறிய சம்பவம் பற்றி சில கருத்துக்களை தம்பி ராமையா ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“நான் விஜய்யுடன் நடித்து கொண்டிருந்த போது ஒரு சம்பவம் நடந்தது. நான் எனது உதவியாளர்களை செல்ல பெயர் வைத்து தான் அழைப்பேன். டேய் சல்மான் கான் அப்படி சொன்னா வருவான். டேய் ஷாருக் கான் அப்படின்னு சொன்னா வருவான். தம்பி விஜய் இதை கவனித்துக் கொண்டே இருந்தார்.
என் அருகே வந்து, ‘சல்மான் கான், ஷாருக் கான் என சொன்னதும் அவர்கள் ஏன் வருகிறார்கள்?’ என கேட்டார். ‘தம்பி, என்னிடம் வேலை செய்பவர்களுக்கு எனக்கு பிடிக்காதவர்களின் பெயரை வைத்து விடுவேன்’ என்று கூறினேன். அப்போது ஏன் சல்மான் கான், ஷாருக் கானை பிடிக்காது என என்னிடம் விஜய் கேட்டார்.
நேர்ல எப்படி தம்பி சொல்றது?..
‘சல்மான் கான் என்னை விட அழகாக இருக்கிறான். என்னை விட உயரமாக இருப்பதுடன் அழகான நாயகிகளுடன் இணைந்து நடிக்கிறான். ஷாருக் கானுக்கும் எனக்கும் கூட அதே பிரச்சனை தான்’ என நான் விஜய்யிடம் விளக்கினேன். அந்த சமயத்தில் அவர் என்னிடம், ‘அப்போது என்னையும் பிடிக்காதா?’ என கேட்க வர, ‘அதை எப்படி தம்பி நேரில் சொல்வது?’ என கூறினேன்” என்று ஜில்லா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவத்தை தம்பி ராமையா விளக்கி இருந்தார்.