தமிழில் டப்பிங் செய்து ரிலீஸாக இருக்கும் மலையாளத்தில் வசூல் சாதனை படைத்த ‘ப்ரேமலு’ திரைப்படம்…

By Meena

Published:

மலையாள மொழியில் தயாராகி கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி உலகளவில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனாக 100 கோடிக்கு மேல் வசூலித்த திரைப்படம் ‘ப்ரேமலு ‘. இந்த படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் ‘ப்ரேமலு’ திரைப்படம் 5 வது இடத்தை பெற்றுள்ளது.

இப்படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் கே கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷியாம் மோகன், மீனாக்ஷி ரவீந்திரன், மேத்தியூ தாமஸ் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளார்கள். பகத் பாசில் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரேமலு ஒரு ரொமான்டிக் காமெடி திரைப்படம் ஆகும். தன் வாழ்நாள் முழுவதும் தோல்விகளை கண்டு பழகிக்கொண்ட ஒரு இளைஞன் சச்சின். வாழ்வில் வெற்றி பெற்று உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காத இளம்பெண் ரீனு. இவர்கள் இருவரையும் காலம் ஹைதராபத்தில் இணைக்கிறது. அந்த பெண்ணின் மீது காதல் வய படுகிறான் சச்சின். அதற்குப் பின் அவர்கள் பயணம் என்னவானது என்பது மீதி கதை.

படம் தொடங்கி இறுதி வரை பார்வையாளர்களை வாய் விட்டு சிரிக்கும் வகையில் அமைத்திருக்கிறார் எழுத்தாளர். கல்லூரி மாணவர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை கண்டறிந்து அதை பூர்த்தி செய்து இருக்கிறார் இயக்குனர் கிரிஷ். மாணவர்கள் உயர் படிப்பிற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதைப் பற்றியும் இப்படம் பேசுகிறது. வேடிக்கையான காட்சிகள் மற்றும் யதார்த்தமான நகைச்சுவை இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்று சொல்லலாம்.

மலையாளத்தில் இப்படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், முதலாவதாக தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. தற்போது இந்த படத்தை டிஸ்னி + ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது. மேலும் இப்படத்தை தமிழில் டப்பிங் செய்து வருகிற மார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.