விசு படத்துக்காக கட்டிய வீடு.. பல ஹிட் படங்களைக் கொடுத்த ராசியான வீடு என பெயர் பெற்ற வரலாறு..

By John A

Published:

ஏ.வி.எம். புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கடந்த 1986-ல் விசுவின் கதை, வசனம், இயக்கத்தில் வெளியான படம் தான் சம்சாரம் அது மின்சாரம். ஒரு குடும்பப் படமென்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாய் அச்சாரம் போட்ட படம் இது. இந்தப் படத்திற்காக ஏ.வி.எம் கிள்ளிக் கிள்ளித்தான் செலவே செய்தது.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வரலாற்று வெற்றியைப் பெற்றது. தயாரிப்பு செலவைக் காட்டிலும் பலமடங்கு லாபத்தைக் கொடுத்தது. மேலும் தேசிய விருதினையும் பெற்றது. விநியோகஸ்தர்களுக்கும் வாங்கிய விலையைவிட 10 மடங்கு லாபத்தினைக் கொடுத்தது. விசுவிற்கு இந்தப்படம் ஒரு மைல்கல்லாக விளங்கியது.

இந்தப் படத்திற்காக விசு வாழும் வீடுபோன்று செட் ஒன்று போடத் திட்டமிடப்பட்டது. அந்த நிலையில் அப்போது ஏ.வி.எம். ஸ்டுடியோவில் இந்த செட்டுக்குப் பதிலாக ஒரு வீட்டையே கட்டலாம் என தீர்மானிக்கப்பட்டது. எனவே அருகில் இருந்த ஒரு காலியிடத்தில் சம்சாரம் அது மின்சாரம் படத்திற்காக செட் ஒன்று போடப்பட்டது.

இயக்குநர் என அடையாளம் தெரியாமலே வாய்ப்புக் கேட்ட சூரி.. புரோட்டா சூரி ஆனது இப்படித்தான்..

மிகப்பெரிய பங்களாக்களில் எடுக்கப்படும் படங்கள் கூட வசூலில் சோடை போகும் நிலையில் சாதாரண மிடில் கிளாஸ் வீடு போன்று கட்டப்பட்ட இந்த வீட்டில்தான் முழுப் படமே நகரும். படத்தில் நடிகர், நடிகைகளுடன் இந்த வீடும் முக்கியப் பங்காற்றி இருக்கும்.

இப்படி உருவாக்கப்பட்ட இந்த வீட்டில் எடுக்கப்பட்ட சம்சாரம் அது மின்சாரம் படம் எப்படி மிகப்பெரிய ஹிட்டானதோ அதே போன்று அந்தப் படத்தின் வெற்றிக்குப்பின் மீண்டும் அந்த வீட்டில் வேறு படங்களும் எடுக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 5 படங்கள் இந்த வீட்டில்தான் எடுக்கப்பட்டது. இப்படி அந்த வீட்டில் எடுக்கப்பட்ட அனைத்துப் படங்களும் சூப்பர் ஹிட் ஆக, தமிழ் சினிமாவின் ராசியான வீடாகிப் போனது சம்சாரம் அது மின்சாரம் வீடு.

தமிழ் சினிமாவில் சென்டிமெண்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வேளையில் இதுபோன்று கையைக் கடிக்காத செலவினைக் குறைத்து அதிக லாபம் கொடுக்கும் ராசியான சூட்டிங் ஸ்பாட்களில் சம்சாரம் அது மின்சாரம் பட வீடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.