சிவாஜி கணேசன், பத்மினி ஆகியோர் இணைந்து சுமார் 50 திரைப்படங்கள் வரை நடித்துள்ளனர். அதில் பலருக்கும் பிடித்தமான படங்கள் ஏராளம் இருக்கும். அந்த வகையில், சிவாஜி மற்றும் பத்மினி என்ற பெயரை சொன்னாலே பெரும்பாலான ரசிகர்களுக்கு ஞாபகம் வரும் ஒரு படம் என்றால் அது நிச்சயம் தில்லானா மோகனாம்பாள் தான். இந்த படத்தில் நாட்டியம் மற்றும் நாதஸ்வரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
சிவாஜி கணேசன், பத்மினி உள்ளிட்ட இந்த திரைப்படத்தில் நடித்த அனைவரது நடிப்பும் மிக சிறப்பாக அமைந்திருக்கும். அந்த வகையில், பத்மினியின் அம்மாவாக நடித்த சிகே சரஸ்வதியை நிச்சயம் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இவர் ஏராளமான தமிழ் படங்களில் அம்மா கேரக்டரில் நடித்தவர். அது மட்டுமில்லாமல், சற்று வில்லத்தனமான கேரக்டரிலும் அசத்துவது தான் இவரது ஸ்பெஷாலிட்டி.
1945 ஆம் ஆண்டு ’என் மகன்’ என்ற திரைப்படத்தில் தான் சி.கே. சரஸ்வதி நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் 1950 களில் ஏராளமான படங்களில் நடித்தார். பெரும்பாலும் அவர் காமெடி கேரக்டரிலும், அக்கா, தங்கை, அண்ணி கேரக்டர் என்று தான் நடித்து வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அவருக்கு அம்மா கேரக்டர் நிரந்தரமாகி விட்டது. குறிப்பாக வில்லத்தனமான அம்மா கேரக்டரில், மாமியார் கேரக்டரில் நடிப்பதில் அவர் வல்லவர்.
கடந்த 1959 ஆம் ஆண்டு வெளியான ’வண்ணக்கிளி’ என்ற திரைப்படத்தில் டிஆர் ராமச்சந்திரன் அம்மாவாக நடித்து கலக்கியிருப்பார் சி.கே. சரஸ்வதி. இதன் பிறகு ’குறவஞ்சி’ ’பாக்கியலட்சுமி’ ’மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே’ ’அவனா இவன்’ ’பாசம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
மேலும் ‘படித்தால் மட்டும் போதுமா’ ’பார்த்தால் பசி தீரும்’ உள்ளிட்ட பல சிவாஜி கணேசன் படங்களிலும் ’விக்ரமாதித்தன்’ ’குமரிப்பெண்’ உள்ளிட்ட பல எம்.ஜி.ஆர் படங்களிலும் நடித்தார். 1966 ஆம் ஆண்டு வெளியான ’மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ என்ற படத்தில் காமெடி வேடத்தில் இவர் கலக்கியிருப்பார்.
சி.கே. சரஸ்வதிக்கு மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்த திரைப்படம் என்றால் அது ’தில்லானா மோகனாம்பாள்’ படம் தான். இந்த படத்தில் அவர் பத்மினியின் தாயாராக நடித்திருப்பார். இவருக்கும் டி எஸ் பாலையாவுக்கும் இடையே உள்ள காட்சிகள் காமெடியின் உச்சமாக இருக்கும்.
இதனையடுத்து கே. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’இரு கோடுகள்’ என்ற திரைப்படத்தில் ஜெமினி கணேசன் அம்மாவாக நடித்து அசத்தியிருப்பார். சிவகுமார் நடித்த ’பொண்ணுக்கு தங்க மனசு’ சிவாஜி நடித்த ’வாணி ராணி’ உட்பட பல திரைப்படங்களில் இவர் நடித்தார். கடந்த 1990 வரை இவர் சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த சூழலில் அதன் பின்னர் அதிகம் நடிக்கவில்லை.
1945 முதல் 98 வரை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேல் திரையுலகில் இருந்து ஏராளமான கேரக்டரில் நடித்திருந்த நடிகை சிகே சரஸ்வதி, கடந்த 1998 ஆம் ஆண்டு காலமானார். அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் சேர்ந்து அஞ்சலி செலுத்தி இருந்தது. காமெடி கலந்த வில்லத்தனமான கேரக்டரில் சிகே சரஸ்வதிக்கு இணையாக ஒரு நாயகி இனி வருவாரா என்பது கேள்விக்குறி தான்.