கடந்த 70 ஆம் ஆண்டுகளில் இலங்கை வானொலியில் சுராங்கனி என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருந்தது. அந்த பாடல் தமிழ்நாட்டிலும் கூட மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருந்தது. இந்த நிலையில், அதன் மூலம் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நுழைந்தவர் தான் சிலோன் மனோகர்.
கடந்த 1970 ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் சுராங்கனி என்ற பாப் பாடலை பாடியவர் சிலோன் மனோகர். அந்த பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்று பல மொழிகளில் பாடப்பட்டது. தமிழ், இந்தி உள்பட எட்டு மொழிகளில் அந்த பாடல் உருவாக்கப்பட்டது. கொங்கனி மொழியில் பாடப்பட்ட இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அப்படி இருக்கையில், பிரபலமான பாடகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தார் சிலோன் மனோகர். ஒரு சில பாடல்களையும் அவர் பாடினார். ஆனால் அவருக்கு கிடைத்ததோ நடிப்பதற்கான வாய்ப்பு தான். தமிழ் உள்பட பல மொழிகளில் ஏராளமான படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து கலக்கினார்.
1978 ஆம் ஆண்டு மாங்குடி மைனர் என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்க வந்தார் சிலோன் மனோகர். இந்த படத்தில் ரஜினிகாந்த் வில்லனாகவும், விஜயகுமார் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அதன் பிறகு ரஜினியுடன் ’என் கேள்விக்கு என்ன பதில்’ கமல்ஹாசன் உடன் ’மனிதரில் இத்தனை நிறங்களா’ ’குரு’ சிவாஜி கணேசன் உடன் ’லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’ ’அமர காவியம்’ ’சங்கிலி’, ’நீதிபதி’ போன்ற படங்களில் நடித்தார்.
1986 ஆம் ஆண்டுக்குப் பின்னர் திரை உலகில் இருந்து ஓய்வு எடுத்த சிலோன் மனோகர், நீண்ட இடைவேளைக்கு பிறகு மாதவன் நடித்த ஜேஜே மற்றும் சிம்பு நடித்த தொட்டி ஜெயா போன்ற படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்தார் என்பதும் சில சீரியல்களிலும் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ’அத்திப்பூக்கள்’ ’திருமதி செல்வம்’ ஆகிய சீரியல்களில் நடித்த நிலையில் திருமதி செல்வம் சீரியலில் நந்தினியின் தந்தையாக நடித்து அசத்தியிருப்பார் சிலோன் மனோகர்.
இதனிடையே, நடிகர் மற்றும் பாடகர் சிலோன் கடந்த 2018 ஆம் ஆண்டு உடல் நல குறைவால் காலமானார். தனது சொந்த நாடான இலங்கையை விட்டு விட்டு சென்னையிலேயே செட்டிலாகி, அங்கேயே சொந்த வீடு வாங்கி குடும்பத்துடன் இருந்து வந்த சிலோன் மனோகரை ஒரு பாடகராக திரையுலகம் அதிகம் பயன்படுத்தவில்லை என்பது அவரது தரப்பினரின் பெரிய ஆதங்கமாகும்.
சிலோன் மனோகர் என்றாலே அவரது வில்லத்தனமான நடிப்பு ஒரு பக்கம் ஞாபகம் வந்தாலும் இன்றும் யூடியூபில் சுராங்கனி என்ற பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. இன்னும் பல தலைமுறைகள் கடந்து அனைத்து தரப்பினரும் அந்த பாடலை ரசித்து கேட்பார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.