கலைஞர் கருணாநிதிக்கு இன்று (3.6.2024)பிறந்த நாள். நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கலைஞர் 100 விழாவில் கலந்து கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலைஞரைப் பற்றி என்னென்ன சொன்னார்னு பார்க்கலாமா…
கலைஞரைப் பத்திப் பேசணும்னா எங்க ஆரம்பிக்கறது எங்க முடிக்கிறதுன்னு தெரியாது. டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் எப்ப பார்த்தாலும் கலைஞர் பத்தியே பேசிக்கிட்டு இருப்பாரு. அதனால எனக்கு அவர் மேல ஒரு ஈர்ப்பு வந்தது. அவரோட டைரக்ஷன்ல 23 படத்துல நான் நடிச்சிருக்கேன்.
சிவாஜி சாரை ஒரே நாள்ல ஸ்டார் ஆக்குனாரு. எம்ஜிஆருக்கு ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, மலைக்கள்ளன்னு பல படங்கள எடுத்து அவரை ஸ்டார் ஆக்குனாரு. 1955ல மந்திரிகுமாரி, மலைக்கள்ளன் ஆகிய படங்கள்ல வாங்குன படத்துல தான் கோபாலபுரத்துல வாங்குன வீடு. கடைசி வரைக்கும் அதே வீட்டுல இருந்தாங்க.
படிக்கட்டு கூட மாற்றல. ஆடம்பரத்துக்கு எப்பவும் அவரு போனது கிடையாது. கலைஞர் அரசியல் போகாம சினிமா உலகத்துல மட்டும் இருந்து இருந்தா இன்னும் எத்தனையோ எம்ஜிஆர், சிவாஜிகளை உருவாக்கிருப்பாரு. அவரை வந்து அரசியல் எடுத்துட்டுப் போயிட்டு.
ஒருத்தருக்கு எழுத்தாற்றல் இருந்தா பேச்சாற்றல் இருக்காது. ஆனா அவருக்கு இரண்டுமே இருந்தது. எழுத்து இல்லன்னா மதங்கள் இல்லை. புராணங்கள் இல்லை. சரித்திரம் இல்லை. வரலாறு இல்லை. அறிவியல், விஞ்ஞானம், வர்த்தகம், கதை, கவிதை, அரசன் இல்லை. அரசாணையும் இல்லை. அந்த இயற்கை சக்தி, காஸ்மிக் எனர்ஜி அவருக்கிட்ட இருந்தது. அந்த எழுத்து அவரிடம் கைகூடி இருந்தது.
நெஞ்சுக்கு நீதி 7 தொடர்கள் 4000 பக்கங்கள் கிட்டத்தட்ட 3 லட்சம் பக்கங்கள் எழுதியிருக்காங்க. முரசொலியில் சில கடிதங்கள் படிச்சா கண்ணுல தண்ணீரும், சில கடிதங்கள் படிச்சா கண்ணுல நெருப்பும் வந்துடும். சிலர் பேச ஆரம்பிச்சா எப்படா முடிப்பாருன்னு இருக்கும். ஆனா சிலர் பேச ஆரம்பிச்சா ஐயய்யோ இவர் பேசி முடிச்சிரப் போறாங்களோன்னு இருக்கும்.
கலைஞரோட பேச்சு அப்படி இருக்கும். அவர் பேச்சில் வந்து தெனாலிராமனோட நையாண்டித்தனம் இருக்கும். சாணக்கியனோட ராஜதந்திரம் இருக்கும். பாரதியோட கோபம் இருக்கும். அவர் பாமர மக்களுக்கு பாமரமாகவும், அறிஞர் சங்கத்தில் அறிஞராகவும், கவிஞர் சங்கத்தில் கவிஞராகவும் பேசுவார். அது கலைஞர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.