சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ்த்திரை உலகின் உச்சநட்சத்திரமாக இன்று வரை இயங்கி வருகிறார். அதே நேரம் அவர் ஒவ்வொரு படம் நடிக்கும் போதும் இதுதான் அவரது கடைசி படம் என்பது போல ஒரு பிம்பம் உருவாகி வந்தது.
படையப்பா படமும் அந்த ரகத்தில் தான் வந்தது. கே.எஸ்.ரவிகுமார் ரஜினியின் ஆஸ்தான டைரக்டர். அவரது இயக்கத்தில் வந்த இந்தப் படத்தில் செவாலியே சிவாஜியும் ரஜினியுடன் இணைந்து நடித்து அசத்தினார். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.
இதுதான் ரஜினியின் கடைசி படம் என்ற நிலையில் வெளியானது. அப்போது படையப்பா தமிழகத்தில் ரூ.28 கோடியை வசூலித்தது. அதே போல் வெளிநாடுகளில் இருந்து ரூ.10 கோடியை வசூலித்த முதல் தென்னிந்திய படமும் இதுதான்.
இந்தப் படத்தின் பட்ஜெட்டே ரூ.3 கோடி தான். ஆனால் அதன் உலகளாவிய வசூல் எத்தனை கோடி தெரியுமா? ரூ.61 கோடி. படத்தின் பட்ஜெட்டை விட 20 மடங்கு வசூலை ஈட்டி மிகப்பெரிய சாதனை படைத்தது.
இதைத் தொடர்ந்து 2002ல் ரஜினி கம்பேக் கொடுக்க நினைத்தார். அதுதான் பாபா படம். பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வி. 2 ஆண்டுகள் ஓய்வு. அதன்பிறகு அவர் குதிரை போல டக்கென துள்ளி எழுந்து நடித்த படம் தான் சந்திரமுகி. ஆப்தமித்ரா என்ற கன்னடப் படத்தின் தாக்கம் தான் ரஜினியை சந்திரமுகி படம் எடுக்க உசுப்பேத்தியது.
இந்தப் படத்தைப் பார்த்ததுமே டைரக்டர் பி.வாசுவை அழைத்தார் ரஜினி. படத்தைப் பற்றிக் கேட்டார். ஏற்கனவே பிரபுவை ஹீரோவாக வைத்து இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை தமிழில் எடுக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறினார். ரஜினிகாந்த் தனது விருப்பத்தைக் கூறினார்.
அதுமட்டும் அல்லாமல் பிரபுவும் தன்னுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி பிரபு சைடு ரோலில் நடிக்க சம்மதித்தார். படம் தெலுங்கு பதிப்புடன் சேர்ந்து உருவானது. செம பிக் அப். 800 நாள்களைக்கடந்து ஓடி சாதனை புரிந்தது. 2கே கிட்ஸ்களின் பீரியடில் ஒரு தமிழ்த்திரைப்படம் அதிக நாள்கள் ஓடியது என்றால் அது இந்தப் படம் தான்.
பாக்ஸ் ஆபீஸில் சரித்திரம் படைத்த சந்திரமுகியின் வெற்றி தான் ரஜினியை அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தூண்டியது. இந்த வயதிலும் தன்னால் படத்தை பிளாக் பஸ்டர் ஹிட்டாக்க முடியும் என்ற நம்பிக்கையை சூப்பர்ஸ்டாருக்குத் தந்தது இந்தப் படம் தான். சந்திரமுகியின் வெற்றி தான் தற்போது சந்திரமுகி 2 உருவாகக் காரணமாகியுள்ளது.