சிஷ்யனுக்காக டிராலி தள்ளிய குரு.. பிரபுவுக்காக சூப்பர் ஸ்டார் செய்த தரமான சம்பவம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், இளைய திலகம் பிரபுவும் இணைந்து சந்திரமுகி, குசேலன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன் போன்ற சில படங்களில் நடித்திருக்கின்றனர். இவர்கள் இருவரது காம்போவும் சினிமாவில் ரசிகர்களுக்கு புது விருந்தாக இருந்தது. மேலும் இந்தக் கூட்டணி நடித்த படங்கள் குசேலன் தவிர்த்து மற்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

இதில் 1988ல் ரஜினியின் ஆஸ்தான இயக்குநரான எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் இருவரும் இணைந்து நடித்த படம்தான் குரு சிஷ்யன். ரஜினி, பிரபுவுடன் கௌதமி, சீதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பஞ்சு அருணாச்சலம் தயாரித்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அப்போது தான் பிரபு நடிகர் திலகத்தின் மகன் என்பதைத் தாண்டி தனக்கென ஒரு மார்க்கெட்டைப் பிடித்திருந்தார். அப்போது ரஜினியும், கமலும் உச்ச நடிகர்ளாக படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரம். குரு சிஷ்யன் படத்தில் வரும் ஒரு சண்டைக் காட்சியானது ரஜினிக்காக உருவாக்கப்பட்டிருந்தது.

அப்போது ரஜினி இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம் இந்த சண்டைக்காட்சியில் பிரபு நடிக்கட்டும் என்று கூறியிருக்கிறார். நான் சண்டையின் இறுதியில் வந்து மீண்டும் இணைவது போல் படமாக்கலாம் என்று எஸ்.பி.முத்துராமனிடம் கூறி தனக்காக அமைக்கப்பட்ட சண்டைக் காட்சியை இளைய திலகம் பிரபுவுக்காக விட்டுக் கொடுத்திருக்கிறார்.

மன்னிப்புக் கேட்ட நாகார்ஜுனா..வயதான ரசிகரை பாதுகாவலர் தள்ளிவிட்ட சம்பவத்திற்கு வருத்தம்..

மேலும், இந்தப் படத்திற்காக ரஜினி 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தாராம். இந்நிலையில் ஷுட்டிங்கிற்காக படக்குழு மைசூர் முகாமிட்டிருந்தது. அப்போது பிரபுவை வைத்து வா.. வா.. வஞ்சி இளமானே பாடல் படமாக்கப் பட்டது. எனவே எஸ்.பி.முத்துராமன் ரஜினியிடம் இன்று ஒரு நாள் நீங்கள் சென்னை செல்ல வேண்டுமென்றால் போய் வாருங்கள். நான் அதற்குள் இன்று இந்தப் பாடலின் ஷுட்டிங்கை முடித்து விடுகிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் அதில் விருப்பமில்லாத ரஜினி பரவாயில்லை இன்று ஒருநாள் நான் இங்கேயே இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதன்பின் மறுநாள் அந்தப் பாடல் படமாக்கப்பட்ட போது ரஜினி தனக்குக் காட்சிகள் இல்லையென்றாலும் விறுவிறுவென ஷுட்டிங் ஸ்பாட் வந்திருக்கிறார். வந்தவர் சும்மா இல்லாமல் பிரபு நடித்துக் கொண்டிருந்த அந்தப் பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்த போது ஒளிப்பதிவாளர், இயக்குநர் அமர்ந்திருந்த டிராலியை தள்ளியிருக்கிறார். இப்படி ஒரு படத்திற்காக தனது பங்கு நடிப்பது மட்டுமன்றி மற்ற கலைஞர்கள், தொழிலாளர்களுக்கும் உதவியாக இருந்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

குருசிஷ்யன் படம் வெளிவந்து சூப்பர்ஹிட்டானது. குறிப்பாக பாடல்களும், காமெடிக் காட்சிகளும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இப்போதும் டிவியில் போட்டால் இந்தப் படத்தினை ஸ்கிப் செய்யாமல் பார்க்கும் ரசிகர்கள் ஏராளம்.