தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொரு போட்டியாளர்களும் துணிச்சலாக களத்தில் இறங்கி தங்களது திறனை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தனர். இதனால் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதும் பல டாஸ்க்கில் நிரூபிக்கப்பட்டிருந்த நிலையில் சவாலான போட்டியாளர்களாக இருந்தாலும் வாக்கு உள்ளிட்ட சில விஷயங்கள் காரணமாக பிக் பாஸ் வீட்டில் இருந்தும் வெளியேறி வருகின்றனர்.
மக்களின் ஆதரவு யாருக்கு?
அந்த வகையில் கடந்த சில தினங்களிலேயே ஃபைனலுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அன்ஸிதா, ஜெஃப்ரி உள்ளிட்ட சிலர் வெளியேறியிருந்ததும் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே கடந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றிருந்த நிலையில் தற்போது பழைய போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர். ஃபேட்மேன் ரவீந்தர் உள்ளே நுழைந்த போது முத்துக்குமரன், ஜாக்குலின் உள்ளிட்டோருக்கு வெளியே உள்ள ஆதரவை பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்திருந்தார்.
அதே போல ரியா, வர்ஷினி வெங்கட், தர்ஷா குப்தா, சுனிதா உள்ளிட்டோரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சமயத்தில் அங்கிருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மக்களிடம் இருந்து எந்த அளவுக்கு ஆதரவை பெற்றுள்ளனர் என்பது பற்றியும் அவர்கள் எப்படிப்பட்ட கேம் விளையாடும் போது அதிகம் விமர்சனம் செய்கிறார்கள் என்பது பற்றியும் நிறைய ஆலோசனைகளையும், சிக்கல்களையும் விளக்கியிருந்தனர்.
மக்கள் ஏன் வாக்களிக்குறாங்க?
அந்த சமயத்தில் சௌந்தர்யா பற்றி சுனிதா பேசிய விஷயமும் அதற்கு அவர் கொடுத்த பதிலடியும் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. சௌந்தர்யா கேம் உள்ளிட்டவற்றில் அதிகமாக ஈடுபாடுடன் இல்லாமல் அவரது ரியாக்சன் மற்றும் க்யூட்டான தருணங்கள் மூலம் தான் தொடர்ந்து வாக்கு கிடைத்து வருவதாக ஒரு கருத்து இருந்து வருகிறது.
இது பற்றி பேசும் சுனிதா, “ஒவ்வொரு வாரமும் உன்னை மக்கள் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் உனக்கு வாக்களிப்பது ஏன் என்று புரிகிறதா. டாஸ்க் உள்ளிட்ட விஷயங்களுக்காக இந்த வீட்டில் நீ என்ன பங்களிப்பு கொடுத்துள்ளாய்?. டாஸ்க் வந்து விட்டாலும் மூஞ்சை உர் எனவைத்துக் கொள்வது.
சுனிதாவுக்கு சவுந்தர்யாவின் பதிலடி
எதற்கு உனக்கு வாக்களித்து இத்தனை நாட்கள் வைத்திருக்க வேண்டும். என்னை இரண்டாவது நாமினேஷனில் அனுப்பி விட்டார்கள். உன்னை இத்தனை வாரம் வைத்திருக்கிறார்கள்” என்று கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் சௌந்தர்யா, “என்னை அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதே போல கேம் என வரும் போதும் நான் முடிந்த வரை முயற்சி செய்திருக்கிறேன்.
அனைவரிடமும் நிறைய கருத்துக்களை பெற்று கலந்து உரையாடி இருக்கிறேன். நான் எங்கேயும் சும்மாவே உட்காரவில்லை” என்றும் தனது விளக்கத்தை கொடுக்கிறார். இதன் பின்னர் சுனிதா, ஏன் கோபமாக பேசுகிறாய் என சவுந்தர்யாவிடம் கேட்கிறார். நீ கேள்வி கேட்ட விதமும் அப்படி தான் இருந்தது என்றும் சவுந்தர்யா விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.