தமிழ் சினிமாவில் கவுண்டமணி நடித்த காமெடி காட்சிகள் நம் நினைவுக்கு வந்த அடுத்த கணமே நம் மனதில் பதியும் மற்றொரு நடிகர் தான் செந்தில். கவுண்டமணி – செந்தில் காம்போவில் உருவான காமெடி காட்சிகள் ஒவ்வொன்றும் இன்று வரையிலும் எவர்க்ரீனாக இருப்பதுடன் இன்றுள்ள இளைஞர்களும் கூட அதிகமாக அதனை ரசித்தும் வருகின்றனர்.
அந்த அளவுக்கு அவர்கள் இருவரின் காம்போவில் உருவான காமெடி காட்சிகள் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்திருந்த நிலையில் இதைத்தாண்டி கவுண்டமணி சில இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடனும் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அந்த வரிசையில், நவரச நாயகன் கார்த்திக்குடன் இணைந்து நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளார் கவுண்டமணி. இதில் நிறைய திரைப்படங்களை சுந்தர். சியும் இயக்கி உள்ளார்.
கோபத்தில் வந்த கவுண்டமணி
உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, மேட்டுக்குடி, முறை மாமன் என சுந்தர். சி இயக்கிய பல திரைப்படங்களில் கவுண்டமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து காமெடி காட்சிகளில் அசத்தி இருப்பார். அப்படி ஒரு சூழலில், உனக்காக எல்லாம் உனக்காக படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த சம்பவம் பற்றி சுந்தர். சி சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
“உனக்காக எல்லாம் உனக்காக என நான் இயக்கிய திரைப்படத்தில் கவுண்டமணி செய்த காமெடி காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். கவுண்டமணி அண்ணன் அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக ஒரு நாள் வந்த போது மிகவும் கோபமாக ஸ்பாட்டிற்கு வந்திருந்தார். அன்று அவர் வாங்கிய புதிய கார் ஒன்றின் மீது பேருந்து மோதி விட்டதாக தெரிகிறது. இதனால் கவுண்டமணி மிகவும் கோபமாக இருந்தார்.
பஸ் டிரைவர் நாம் தான் தவறு செய்து விட்டோம் என பயத்திலேயே காரை பார்த்திருக்கிறார். ஆனால் உள்ளே கவுண்டமணி அண்ணன் இருப்பதை பார்த்ததும் சிரித்துக் கொண்டே, ‘அண்ணே எப்படி இருக்கீங்க?’ என ட்ரைவர் கேட்டிருக்கிறார். ‘ஏன்யா வண்டிய இடிச்சே?’ என கவுண்டமணி கேட்டதும், ‘படத்துல வர்ற மாதிரியே கோபப்படுறீங்களே’ என அந்த ட்ரைவர் நகைச்சுவையாக கேட்டுள்ளார்.
‘சண்டைக்கு வாங்கடா’..
அந்த சமயத்தில் பேருந்தின் நடத்துனரும் எட்டிப் பார்க்க, அவராவது தனக்கு ஆதரவாக இருப்பார் என கவுண்டமணி நினைத்துள்ளார். ஆனால், அவரும் ‘கவுண்டமணி அண்ணே, எப்படி இருக்கீங்க?. செந்தில் அண்ணன் கூட வரலையா?’ என கேட்டதும் கவுண்டமணி அதிகமாக டென்சன் ஆகிவிட்டார். இதை முடித்து விட்டு ஷூட்டிங் ஸ்பாட் வந்த கவுண்டமணி என்னிடம், ‘பாருப்பா. யாருமே சண்டைக்கு வரமாட்டேங்குறாங்க’ என நடந்த சம்பவத்தை விளக்கியபடி கூறினார்.
இதே வசனம், உனக்காக எல்லாம் உனக்காக படத்தில் கவுண்டமணி மற்றும் கார்த்திக் ஆகியோர் அமர்ந்து உணவருந்தும் காட்சியில் சண்டை போட செங்கலை சோற்றில் போடுவார். அப்போது யாரும் சண்டைக்கு வராமல் போக, ‘டேய், சண்டைக்கு வாங்கடா’ என கவுண்டமணி வசனம் பேசி இருப்பார்” என சுந்தர். சி இந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.