விறுவிறுப்பாக தமிழில் அரங்கேறி வரும் எட்டாவது பிக் பாஸ் சீசன் தற்போது 84 நாட்களை கடந்து விட்டது. ஆரம்பத்தில் சில போட்டியாளர்கள் ஃபைனல் வரை முன்னேறுவார்கள் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அப்படி எதிர்பார்த்தவர்கள் பாதியிலேயே கிளம்ப, பலர் மத்தியில் அதிகம் அறிமுகம் இல்லாத ஜெப்ரி, கிட்டத்தட்ட 12 வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் சிறந்த போட்டியாளராகவும் வலம் வந்திருந்தார்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பலரை விட வயது குறைந்தவரான ஜெஃப்ரி, தனது ஆட்டத்தில் அப்படியே முதிர்ச்சி அடைந்த ஒருவராகவும் விளையாடி இருந்தார். அது மட்டுமில்லாமல், மிக குறுகிய நாட்களிலேயே தன்னை பிக் பாஸ் வீட்டில் சிறந்த போட்டியாளர் என்பதை நிரூபித்த ஜெப்ரி, டாஸ்க் வரும் சமயத்தில் கூட ஒல்லியான உடம்பை வைத்துக் கொண்டே பல போட்டியாளர்களுக்கு ஆட்டம் காட்டி இருந்தார்.
சந்தோசமாக வெளியேறிய ஜெஃப்ரி
அது மட்டுமில்லாமல், சவுந்தர்யா, அன்ஸிதா என பலருக்கும் கூட நெருங்கிய போட்டியாளராக ஜெஃப்ரி இருந்து வந்தார். அப்படி ஒரு சூழலில் தான் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த வகையில் ஜெஃப்ரி முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். விஜே விஷால் அல்லது ஜெஃப்ரி ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறுவார் என கருதப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தான் ஜெஃப்ரி எலிமினேட் ஆனதாக விஜய் சேதுபதி அறிவிக்க, அன்ஸிதா, சவுந்தர்யா, தீபக் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சியில் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் வாயடைத்து போய் நின்றனர். ஆனால், அதே நேரத்தில் தான் எலிமினேட் ஆனதை நினைத்து ஜெஃப்ரி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே மிக இயல்பாக தான் இருந்தார்.
விஷால் போவான்னு நெனச்சேன்..
அனைத்து போட்டியாளர்களின் முன்னிலையில் ஜெஃப்ரி பேசிய போது கூட நானே மகிழ்ச்சியாக இருக்கும் போது நீங்கள் ஏன் சோகமாக இருக்கிறீர்கள் என்றும் கேட்கிறார். அப்படி ஒரு சூழலில், ஜெப்ரி எலிமினேட் ஆனதால் கண்ணீர் விட்டு உடைந்து போன சவுந்தர்யா, அவர் அருகே கட்டியணைத்த படி, பிரிவை நினைக்க முடியாமல் அழுகிறார். அந்த சமயத்தில், ஜெஃப்ரியிடம், ‘விஜே விஷால் தான் போவான்னு நினைச்சேன்’ என்றும் கூறுகிறார் சவுந்தர்யா.
மிகுந்த எமோஷலான தருணத்தில் விஷாலை பற்றி சவுந்தர்யா இப்படி சொன்னதும் விஷால் உள்ளிட்ட அனைவருமே சிரிக்கத் தொடங்கி விட்டனர். இதை கவனித்த மக்கள், ஜெப்ரி இருக்க வேண்டும் என்பதற்காக விஷால் வெளியேற வேண்டுமா என்றும் வேடிக்கையாக குறிப்பிட்டு வருகின்றனர்.