அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரையில் காமெடி நடிகர்களாக இருந்த பலரும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அல்லது முன்னணி நடிகராகவும் திரையில் தோன்றி பல மாயஜாலங்களையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் நாகேஷ், வடிவேல், விவேக், சந்தானம், சதீஷ் என பலரையும் நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.
இதில் மிகக் குறுகிய படங்களிலேயே மிக முக்கியமான இடத்தை சிறந்த நடிகராக பிடித்துள்ளவர் தான் காமெடி நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு படத்தில் வரும் பரோட்டா காமெடி மூலம் பெயர் எடுத்த சூரி, ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.
அப்படி இருக்கையில் அவரது திரை பயணத்தில் மிக முக்கியமான ஒரு படமாக மாறி இருந்தது தான் விடுதலை. காமெடி இல்லாமல் மிக சீரியசான முதன்மை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருந்தார் சூரி. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்த படத்தின் இரண்டாம் பாகமும் இறுதி கட்டப் பணிகளில் இருக்கும் நிலையில் தற்போது காமெடி நடிகர் என்பதை தாண்டி பல திரைப்படங்களில் முன்னணி நடிகராகவும் நடித்து வருகிறார் சூரி. அந்த வகையில் கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை உள்ளிட்ட திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வருகிறது.
இதனிடையே, சமீபத்தில் அவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த கருடன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று வருகிறது. அப்படி இருக்கையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட எந்த நடிகர்களுக்கும் கிடைக்காத ஒரு பாக்கியம் சூரிக்கு கிடைத்துள்ளது பற்றி தற்போது பார்க்கலாம்.
இது பற்றி சூரி ஒரு நேர்காணலில் பேசுகையில், “விடுதலை படத்திற்காக நான் இளையராஜா சார் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். விடுதலை படத்தின் முதல் டியூன் போட்டு பூஜை தொடங்கிய இடம், ராஜா சார் சொந்தமாக இடம் வாங்கி அங்கே ஆஃபீஸ் போட்ட இடத்தின் முதல் பாடல் இது தான். அப்போது நான், வெற்றிமாறன் அனைவரும் அருகே உட்கார்ந்திருக்கும் போது, காட்டுமல்லி பாடலின் டியூனை போட்டு விட்டு அப்படியே என்னை திரும்பி பார்த்தார் இளையராஜா.
‘என்னுடைய 45 வருஷ இசை பயணத்தில் ஒரு ஹீரோவை அருகே உட்கார வைத்து விட்டு டியூன் போட்டது இது தான் முதல் முறை. யாரும் என் அருகே உட்கார்ந்ததில்லை. என்ன சார் போலாமா?’ என என்னிடம் கேட்டதும் கண் கலங்கி விட்டேன். அப்படியே ஒரு மாதிரி பதற்றமும் அடைந்து விட்டேன். அதன் பின்னர் அனைவருமே அவர் ஹீரோவை அருகில் வைத்து இசையமைக்க மாட்டார் என்று தான் கூறினார்கள்.
அப்படி ஒரு பாக்கியம், வெற்றிமாறன் சார் மூலம் எனக்கு கிடைத்தது. அதை என்னால் மறக்கவே முடியாது. அப்படி ஒரு நெகிழ்ச்சி தருணமாக அமைந்திருந்தது” என நேர்காணல் ஒன்றில் உணர்வுபூர்வமாக சூரி பேசி இருந்தார்.