இன்று நாம் தினசரி கேட்கும் பல பக்திப் பாடல்களில் முதன்மையானதாக இருப்பது கந்தசஷ்டி கவசம் ஆகும். இந்தக் கவசத்தினை பாலன் தேவராயச் சுவாமிகள் ஈரோடு சென்னிமலை முருகக் கடவுளுக்காக படைத்தார். இதேபோல் முருகப் பெருமானின் ஒவ்வொரு படை வீட்டிற்கும் ஒரு கவசம் இருக்கும். பக்தியுடன் இந்தப்பாடலை தினமும் பாடி வர வேண்டும்வரம் கிடைக்கும் என்பது இந்துக்களின் அபார நம்பிக்கை ஆகும்.
இப்பேற்பட்ட மகத்துவம் நிறைந்த கந்த சஷ்டி கவசத்தினை பாமரர் கூட இன்று எளிதில் பாடும்வண்ணம் தங்களது காந்தக் குரல்களால் பாடி கேட்போரை மெய்யுருக வைத்திருப்பர் சூலமங்கலம் சகோதரிகள். பல காலங்களில் பல இசையமைப்பாளர்கள், பாடகர்கள் கந்த சஷ்டி கவசம் பாடினாலும் இவர்களது குரலில் கேட்கும்போது தெவிட்டாத இன்பமும், முருகனின் அருளும் பூரணமாக கிடைப்பதாகவே உள்ளது. மேலும் கந்த குரு கவசமும் பாடி பக்தி பாடல் உலகில் முடிசூடா ராணியாக விளங்குகிறார்கள் இந்த சகோதரிகள்.
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகிலுள்ள சூலமங்கலத்தைச் சேர்ந்த கர்நாடக இசைப் பாடகிகள் தான் ஜெயலக்ஷ்மி, இளையவர் ராஜலக்ஷ்மி சகோதரிகள். இவ்விரு சகோதரியரும் குருமூர்த்தி என்ற ஆசிரியரிடம் கர்நாடக இசையைக் கற்றனர். இந்நிலையில் இவர்களது தந்தை மரணத்திற்குப் பின் இவர்களது மாமனார் சுவாமிநாதன் இவர்களை சென்னைக்குக் குடியேற்றியதோடு பத்தமடை கிருஷ்ணன், மாயவரம் வேணுகோபால் ஐயர் ஆகியோரிடம் கர்நாடக இசையைத் தொடர்ந்து கற்க வசதி செய்து கொடுத்தார்.
நாளடைவில் இச்சகோதரிகள் கர்நாடக இசையில் புலமை பெற்று கோவில்களிலும், சபாக்களிலும் பாடி வந்தனர். அதன் பின்னர் அகில இந்திய வானொலியில் பாட இவர்களுக்கு வாய்ப்பு அமைந்தது. இப்படியே இவர்களது இசைப் பயணம் போய்க் கொண்டிருந்த நிலையில் கண்காட்சி ஒன்றில் பாடுவதற்கு வாய்ப்பு கிட்டியது. அக்கண்காட்சியைக் காண வந்த தியாகராஜபாகவதரும், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் கவனித்து இவர்களது திறமையைக் கூறி திரைப்படங்களில் பாடுவதற்குப் பரிந்துரை செய்தனர்.
வாழ்ந்தா இப்படி வாழணும்.. சிரிக்க வைத்த மகா கலைஞன் என்.எஸ்.கே-வின் இறுதி நிமிடங்கள்..
இவர்கள் திறைமையைப் பார்த்த திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் தன்னுடைய இசையில் பாட வாய்ப்புக் கொடுத்தார். தொடர்ந்து லிங்கப்பா, ஜி.ராமனாதன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எஸ்.தக்ஷிணாமூர்த்தி, விஸ்வநாதன் – ராமமூர்த்தி, ஜி.கே.வெங்கடேஷ், வி.குமார், டி.ஆர்.பாப்பா, எம்.எல்.ஸ்ரீகாந்த், குன்னக்குடி வைத்தியநாதன், சங்கர்-கணேஷ், போன்ற பல இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களைக் பாடினர்.
மேலும் டி.எம்.சௌந்தரராஜன், ஏ.எல்.ராகவன், எஸ்.சி.கிருஷ்ணன், சீர்காழி எஸ்.கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஜே.பி.சந்திரபாபு, பாலமுரளி கிருஷ்ணா, கே.ஜே.யேசுதாஸ் போன்ற பாடகர்களுடனும், பீ.லீலா, எம்.எல்.வசந்தகுமாரி, எல்.ஆர்.ஈஸ்வரி, எம்.எல்.வசந்தகுமாரி, ரி.வி.ரத்னம், கே.ஜமுனாராணி, ஏ.ரத்னமாலா, பி.வசந்தா, ஆகிய பாடகிகளுடன் இணைந்து 1948-லிருந்து 1984-ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளனர்.
மேலும் பாடல் மட்டும் நின்று விடாது சூலமங்கலம் ஜெயலக்ஷ்மி தரிசனம், டைகர் தாத்தாச்சாரி, ஜீவநாடி, அப்போதே சொன்னேனே கேட்டியா, ‘பிள்ளையார்’ போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளனர் இந்த சகோதரிகள். இதுமட்டுமல்லாது பல பக்திப் பாடல்களை இசையமைத்துப் பாடியும் உள்ளனர்.