ஹீரோயின்களை தொட்டு நடிக்காத டி. ராஜேந்தர்.. கூடவே இன்னொரு ஸ்பெஷலான விஷயமும் அவரு படத்துல இருக்கும்..

By Ajith V

Published:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் அவரது ஸ்டைல் ஞாபக்கத்துக்கு வருவது போல, உலக நாயகன் கமல்ஹாசன் என்றால் அவரது நடிப்பின் பரிமாணம் ஞாபகம் வருவது போல, டி. ஆர். ராஜேந்தர் என்றால் உடனடியாக ஞாபகத்துக்கு வருவது அவரது அடர்ந்த தாடியும், அடுக்கடுக்காக பேசும் பஞ்ச் வசனங்களும் தான்.

‘வாழக்கா பஜ்ஜி உன் உடம்பை பிச்சி’ என டி. ஆர் பேசுவதை போல பல நட்பு வட்டாரங்களில் நிச்சயம் பலரும் அவரது வசனங்களை பேசியிருக்க கூடும். ஒரு காலத்தில் தனது திரைப்படத்தில் இயக்கம், எழுத்து, கதை, இசை, பாடல்கள் என அனைத்து ஏரியாவிலும் பூந்து விளையாடிய டி. ஆர், சிறந்த நடிகராகவும் அந்த சமயத்தில் வலம் வந்திருந்தார்.

ஒரு தலை ராகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த டி. ஆர், அதன் பின்னர் ரயில் பயணங்களில், உயிருவள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம், உறவைக்காத கிளி, மைதிலி என்னை காதலி, என் தங்கை கல்யாணி, மோனிசா என் மோனலிசா, காதல் அழிவதில்லை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

மேலும் டி. ஆர் இயக்கத்தில் கடைசியாக உருவான திரைப்படம் வீராசாமி. இந்த திரைப்படத்தில் டி. ராஜேந்தர், மும்தாஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இதன் பின்னர் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வரும் டி. ராஜேந்தர், கடைசியாக விழித்திரு என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதற்கிடையில், பின்னணி பாடகராகவும் இருந்து வருகிறார் டி. ராஜேந்தர்.

இந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தில் டி. ராஜேந்தர் பாடி இருந்த ‘அதிருதா உள்ள அதிருது மாமே’ என்ற பாடல் பட்டித் தொட்டியெங்கும் ஹிட்டடித்திருந்தது. இன்று பலரும் கலாய்க்கும் டி. ராஜேந்தர் ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத கலைஞராக தமிழ் சினிமாவில் திகழ்ந்தார். ரஜினி, கமல் என இரு துருவங்கள் தமிழ் சினிமாவை ஆண்ட போது தனது செண்டிமெண்ட் அம்சங்கள் நிறைந்த கதைகளை கொண்டு குடும்பம் குடும்பமாக மக்களை திரையரங்கம் நுழைய வைத்தார் டி. ஆர்.

தான் இயக்கும் படங்களில் பெரும்பாலும் நடிக்கும் டி. ஆர், அடுக்கு மொழியில் வசனங்கள் பேசி அசத்துவதில் கில்லாடி. பலரும் டி. ராஜேந்தர் நடிக்கும் படங்களில் வசனங்களின் ஆடியோ கேசட்டுகளை வாங்கி ரசித்து கேட்டார்கள் என்றும் தெரிகிறது. அந்த அளவுக்கு இயக்கம், கதை, வசனம், பாடலாசிரியர், பாடகர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டு விளங்கிய டி. ராஜேந்தர் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

இதே போல, தான் நடிக்கும் திரைப்படங்களில் உடன் நடிக்கும் நடிகைகளை தொடாமல் நடிக்க வேண்டும் என நினைத்த டி. ஆர், பல படங்களில் அதனை பின்பற்றியும் காட்டி உள்ளார். டி. ராஜேந்தர் இயக்கத்தில் உருவான படங்களின் பெயர்கள் ஒன்பது எழுத்துக்களில் தான் பெரும்பாலும் இருக்கும். உயிருள்ளவரை உஷா, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், மோனிசா என் மோனலிசா, காதல் அழிவதில்லை உள்ளிட்ட டி. ஆர் இயக்கத்தில் இருந்த படங்களின் பெயர்கள் பலவும் ஒன்பது எழுத்துகளில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.