நரம்பைப் புடைக்க வைத்த அமரன் டிரைலர்.. அடுத்த லெவலுக்குப் பாய்ந்த சிவகார்த்திகேயன்

By John A

Published:

அயலான் படத்திற்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற தீபாவளி ரிலீஸாக வெளியாகக் காத்திருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்திய ராணுவத்தில் பணியாற்றிய மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் திரைப்படமாக உருவெடுத்திருக்கிறது. மேஜர் முகுந்த்-ஆக சிவகார்த்திகேயன், ரபேக்காக சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் தேச பக்தியை ஊட்டும் திரைப்படங்களுக்கு எப்பவுமே தனி மவுசு உண்டு. நடிகர் சிவகார்த்திகேயன் இந்த பல்ஸை தரமாகப் பிடித்திருக்கிறார்.

ஜாலியாக ஹீரோயினைச் சுற்றி டூயட் பாடி படம் நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் சற்று மாற்றி அடுத்த லெவலுக்குப் பாய்ந்தார். அதில் வேலைக்காரன், மாவீரன் போன்ற படங்கள் அவருக்குக் கைகொடுத்தன. இதே பார்முலாவைக் கையில் எடுத்து அடுத்தாக உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ளது அமரன் திரைப்டம். ஏற்கனவே அமரன் என்ற பெயரில் கார்த்திக் நடித்த படம் பெரும் வெற்றியைப் பெற்றது. தற்போது அதே டைட்டிலை எடுத்து சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

வெற்றி வெற்றி வெற்றி…. அதுக்கு என்னதான் வழி? இதெல்லாம் உங்கக்கிட்ட இருந்தா போதும்..!

இராணுவ மேஜராக உடம்பினை முறுக்கேற்றி இப்படத்திற்காக அசுர உழைப்பினைக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். டிரைலரின் ஆரம்பத்தில் மேஜர் முகுந்த் தன்னுடைய குழந்தைக்கு பாரதியாரின் அச்சமில்லை.. அச்சமில்லை பாடலைக் சொல்லிக் கொடுக்க அப்படியே சிவகார்த்திகேயன் தன் குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போல் டிரைலர் ஆரம்பமாகிறது.

ஒத்தமகன எப்படிடா இராணுவத்துக்கு அனுப்புறது என்று தாய் ஏங்கும் காட்சியும், ராணுவத்தில் இணைவது தான் எனது லட்சியம் என்று மார்தட்டி சிவகார்த்திகேயன் கூறுவதும் இளைஞர்களுக்கான இன்ஸ்பிரேஷன். ஏற்கனவே அர்ஜுன், விஜயகாந்த், விஜய், சூர்யா, அஜீத் போன்றோர் இராணுவக் கதைகளில் நடித்திருந்தாலும் அமரன் நிஜக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. சாய்பல்லவி அதிகம் மேக்கப் இல்லாமல் இயல்பான குடும்பத் தலைவியாக அப்ளாஸ் அள்ளுகிறார். ஏற்கனவே பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ள நிலையில் வருகிற தீபாவளிக்கு ஜெயம் ரவியின் பிரதர், கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் போன்ற படங்களுடன் அமரனும் திரைவிருந்தாக போட்டி போடுகிறது.