நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பு மட்டுமல்லாமல் புதிய இயக்குநர்களுக்கும், நல்ல கதைக் களங்களை சினிமாவாக்கும் முயற்சியில் சொந்தமாக எஸ்.கே.புரடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தினை நடத்தி வருகிறார். இதன் மூலம் இதுவரை சில படங்களைத் தயாரித்திருக்கிறார். கடந்த 2018-ல் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமான கனா படத்தினை முதன் முதலாகத் தயாரித்தார். தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர், கொட்டுக்காளி, டான், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, குரங்கு பெடல், வாழ் ஆகிய படங்கள் வெளிவந்தன.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தினைப் பயன்படுத்தி போலியாக நடிகர்கள் ஏஜெண்ட்டுகள் செயல்படுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் எஸ்.கே.புரடக்ஷ்ன்ஸ் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ”எங்கள் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்தத் திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜென்ட்கள் நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம்.
இதற்கு மாறாகத் தோன்றும் எந்த மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது சமூக வலைதள பதிவுகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத் துறையில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் தினமும் பலர் சென்னையை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களிடம் தங்களுக்கு பிரபல தயாரிப்பு நிறுவனம், நடிகர்களைத் தெரியும் என்று சிலர் போலியாக அவர்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். மேலும் வாய்ப்புகள் பெற்றுத் தராமல் அவர்களை ஏமாற்றி விடுகின்றனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் சார்பில் யாரும் ஏமாறமல் இருக்க வேண்டும் என எச்சரிக்கைப் பதிவு வெளியிடப்பட்டிருக்கிறது.