தமிழ் சினிமாவில் சந்தானம்- சூரிக்குப் பிறகு காமெடியில் யார் அந்த இடத்தினை நிரப்பப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது களத்தில் இறங்கியவர்தான் யோகிபாபு. இன்று ஒவ்வொரு வெள்ளியும் ரிலீஸ் ஆகும் படங்களில் இவர் நடிக்காத படங்களே இல்லை என்னும் அளவிற்கு வருடம் முழுக்க பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் யோகி பாபு. லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் திரையுலகில் நுழைந்த யோகிபாபு அடுத்தடுத்து வாய்ப்புகளைத் தேடி ஓடிக் கொண்டிருந்தார். அதன்பின் முன்னனி காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது சிவகார்த்திகேயனும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து முன்னனி நடிகராக வளர்ந்து கொண்டிருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் முதன் முதலாக இணைந்த படம் தான் மான்கராத்தே. இந்தப் படத்தில் ஹன்சிகாவின் தந்தையிடம் பெண் கேட்கச் செல்லும் போது திருக்குறள் சொல்லும் போட்டி காட்சி மட்டுமே முதலில் யோகிபாபுவுக்குக் கொடுக்கப்பட்டது. இதில் அவர் சிறப்பாக நடிக்க, சிவகார்த்திகேயன் மான்கராத்தே படத்தில் யோகிபாபுவுக்குக் கூடுதல் காட்சிகளில் நடிக்க வைத்திருக்கிறார்.
அரை மணி நேரத்தில் இளையராஜா இசை அமைத்த பாடல்… அட அந்தப் படமா? சூப்பர் பாடலாச்சே..!
இந்தப் படம் ஹிட்டாக இவர்கள் கூட்டணி அடுத்தடுத்து யோகிபாபுவுக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச் சட்டை படத்திலும் யோகி பாபுவை உள்ளே கொண்டு வந்தார். இந்தப் படமும் ஹிட்டாக சிவகார்த்திகேயன் இயக்குநர் நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலா படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்புப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
இப்படி யோகிபாபுவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய பெருமை சிவகார்த்திகேயனையே சாரும். இதனையடுத்து மீண்டும் இவர்கள் கூட்டணி ரெமோ படத்தில் இணைந்தது. இந்தப்படமும் ஹிட். தொடர்ந்து நெல்சனின் அடுத்த படமான டாக்டர் படத்திலும் எஸ்.கே. – யோகிபாபு இணைந்தனர். இப்படி இவர்கள் காம்பினேஷன் அடுத்தடுத்து ஹிட் ஆனது. மேலும் மிஸ்டர் லோக்கல், மாவீரன், அயலான் படத்திலும் இவர்கள் காம்போ கலக்கியது. இப்படி சிவகார்த்திகேயன் தனது பெரும்பாலான படங்களில் யோகிபாபுவை உடன் நடிக்க வைத்திருக்கிறார்.