தனது குரலை ஒதுக்கிய சிவாஜியிடம் சவால்விட்டு ஜெயித்து ரசிகர்கள் மனதில் இன்றும் நிலையா இடம் பிடித்திருப்பவர்தான் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள். மதுரையில் ஒரு சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்த டி.எம்.எஸ் அவர்கள் முறைப்படி கர்நாடக சங்கீதம், வாய்ப்பாட்டு போன்றவற்றைக் கற்றார். பின்னர் மேடைக் கச்சேரிகளிலும், கோவில்களிலும் பாடி வந்த இவரின் திறமையை சுந்தர்ராஜ் நட்கர்னி என்ற இயக்குநர் தனது கிருஷ்ணவிஜயம் படத்தில் ‘ராதே என்னை விட்டுப் போகாதாடி..‘ என்ற பாடல் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகம் செய்தார்.
எனினும் இவரது பாடல்கள் அதிகம் பேசப்படவில்லை. அப்போது சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன், கே.பி.சுந்தராம்பாள் போன்ற பாடகர்கள் முன்னணியில் இருந்த காலகட்டம் அது. 1954-ல் தான் டி.எம்.எஸ்-க்கு அதிர்ஷடம் அவரது வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறது.
சிவாஜி நடிப்பில் ‘தூக்குத்தூக்கி’ என்ற படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள். சிவாஜிக்கு பின்னணி பாடுவதற்காக, அப்போது பிரபலமாக விளங்கிய பாடகர் திருச்சி லோகநாதனிடம் கேட்டபோது அவர் சொன்னார்: “ஒரு பாடலுக்கு ஐநூறு ரூபாய். எட்டும் பாடுவதற்கு நான்காயிரம்.”
”நாலாயிரமா ? கொஞ்சம் குறைச்சுக்கலாமே..?” என்று தயாரிப்பாளர்கள் தரப்பில்
தயக்கத்தோடு கேட்க, “அப்படி ரேட்டைக் குறைத்துக்கொண்டு என்னால் பாட முடியாது. வேணும்னா உங்களுக்கு ஒரு வழி சொல்கிறேன். மதுரையிலிருந்து செளந்தரராஜன் என்கிற ஒரு பாடகர் புதுசா வந்திருக்கிறார். அவரை வேணும்னா கேட்டுப்பாருங்கள்.”
சௌந்தரராஜனா ? யார் அவர் ? எங்கே இருக்கிறார் ? திருச்சி லோகநாதனின் அந்த ஆலோசனையைக் கேட்டு ஆளுக்கு ஒரு பக்கம் தேடி, அடுத்த நாளே தொகுளுவ மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ்.ஸைப் பிடித்தார்கள்.
“எட்டுப் பாடல்களையும் நீங்களே பாடுங்கள். மொத்தமாக இரண்டாயிரம் ரூபாய்தான் சம்பளம் தர முடியும். ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா?” என்று தயாரிப்பு தரப்பு கேட்க, ஒரு கணம் சிந்தித்தார் டி.எம்.எஸ்.
இறைவன் ஒவ்வொரு வேளைகளிலும், நம் எல்லோருக்காகவும், ஏதோ ஒரு வாசல் கதவை திறந்து வைத்துக் கொண்டே காத்திருக்கிறான். டி.எம்.எஸ்.புரிந்து கொண்டு ஒரு கணம் கூட தாமதிக்காமல் உடனே சம்மதித்தார். காரணம், அந்த கால கட்டங்களில், மதுரை பஜனை மடங்களில் பாட்டு பாடி, அதற்குச் சன்மானமாக காப்பி, காராச்சேவு, பக்கோடா மற்றும் இரண்டு ரூபாய் வாங்கிய காலம் அது.
அடுத்த கமல்ஹாசன் என்று போற்றப்பட்டவர் அட்ரஸே இல்லாமல் போன பரிதாபம் : காஜா ஷெரீப் தற்போதைய நிலை
ஆனால் டி.எம்.எஸ்.சின் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. “தூக்குதூக்கி” கதாநாயகன் சிவாஜி சொன்னார்: “‘பராசக்தி’யில் குரல் கொடுத்த சி.எஸ். ஜெயராமன்தான் எனக்குப் பொருத்தமாக இருக்கும். அந்த ஜெயராம பிள்ளையைப் பாடவைக்காமல், நேற்று வந்தவரை எல்லாம்…” என்று அதிருப்தியுடன் சிவாஜி இழுக்க…
பார்த்தார் டி.எம்.எஸ். சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் சிவாஜியிடம் ஒரு சவால் விட்டார் :“நான் பாடுவதை ஒலிப்பதிவு செய்து கேளுங்கள். பிடிக்கவில்லை என்றால் நான் விலகிக்கொள்கிறேன்.” அசராமல் டி.எம்.எஸ். சொன்னதை, அரைகுறை மனதோடு ஒப்புக்கொண்டார் சிவாஜி.
மளமளவென்று மூன்று பாடல்களை ஒலிப்பதிவு செய்து சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன். சிவாஜிக்கு ஒரே சந்தோஷம் : “அட, என் குரல் மாதிரியே பாடி இருக்காரே. நல்லா வந்திருக்கு. எல்லாப் பாட்டையும் நீங்களே பாடுங்க..” ‘பெண்களை நம்பாதே’, ‘ஏறாத மலைதனிலே’ என தூக்குத்தூக்கியின் அத்தனை பாடல்களையும் டி.எம்.எஸ்ஸே பாடி அமர்க்களப்படுத்தினார். அதன்பின்தான் சிவாஜியின் ஆஸ்தான குரலாக டி.எம்.எஸ் ஒலிக்க ஆரம்பித்தார்.