இன்றும் நம்மில் பலபேர் வாழ்க்கையின் வெறுப்பில் இருந்தாலோ அல்லது அதிக மன அழுத்தத்தில் இருந்தாலோ இந்தப் பாட்டு தான் ஞாபகத்திற்கு வரும். அந்தப் பாடல் தான் புதிய பறவை படத்தில் இடம்பெற்ற எங்க நிம்மதி.. எங்கே நிம்மதி என்ற பாடல். வாழ்க்கையின் ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற தத்துவப் பாடல்களைக் கொடுத்து மனிதனின் உணர்வுகளை புரிந்து கொள்ள கண்ணதாசன் பாடல்கள் எப்பொழுதுமே கிளாசிக் ரகம் தான். அப்படிப்பட்ட ஒரு பாடல்தான் எங்கே நிம்மதி பாடல்.
நடிகர் திலகத்தின் தயாரிப்பில் வெளிவந்த முதல் படம் ஆகும். 1964-ல் வெளிவந்த இப்படத்தில் சிவாஜிகணேசன், சரோஜாதேவி, சௌகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, நாகேஷ், மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர். வழக்கம் போலவே சிவாஜி கணேசனின் எவர்கீரின் படங்களில் ஹிட் வரிசையில் இப்படமும் இணைந்தது.
இப்படத்தில் இடம்பெற்ற எங்கே நிம்மதி பாடலுக்காக எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன் ஆகியோர் 21 நாட்களாக கம்போஸிங் செய்தும் திருப்தியாக இல்லையாம். என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு சிவாஜி கொடுத்த ஒரு ஐடியாவால் இந்தப் பாடல் உருவாகியதாக எம்.எஸ்.விஸ்வநாதன் கூறுகிறார்.
அவர் கூறும் போது, “எங்கே நிம்மதி பாடலின் முதல் வரி திருப்தியாக அமையவில்லை, நானும் கண்ணதாசனும் ரொம்ப கஷ்டப்பட்டோம். சிவாஜி கடினமான தன் வேலைப் பளுவுக்கு இடையிலும் ஜாலியாகப் பேச, தினமும் எங்களைப் பார்க்க வருவார். ஒரு நாள் ‘என்ன விசு.. என்ன கவிஞரே இன்னும் முடிக்கலையா? என்று கேட்டார். விஷயத்தைச் சொன்னோம்.
இவ்வளவுதானே… என்று அந்தக் காட்சியை உணர்ச்சி பொங்க, எங்கள் முன் நடித்துக் காட்டினார். நான் முட்டி மோதித் தவிக்க வேண்டும். எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்று அலற வேண்டும்’ என்று சொன்னார். உண்ர்ச்சி வேகத்தில் அவர் சொன்ன வார்த்தைகளை வைத்தே கவியரசர் பாடலை ஆரம்பித்தார். அப்படியாக சிவாஜியின் நடிப்புத்தான் இன்று வரையில் நம் நினைவில் நிற்கும் ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு உந்துதல் சிவாஜி தான்.“ என்று கூறினார்.
டி.எம்.எஸ் குரலில் ஒலித்த இப்பாடல் இன்று வரை பல இடங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.