சிவாஜிக்கு நடிகர் திலகம் பெயர் உருவாக காரணமாக இருந்த 2 ரசிகர்கள்.. ஒரே கடிதத்தால் கிடைத்த பெருமை..

By Ajith V

Published:

தமிழ் சினிமாவில் காலம் கடந்து நிற்கக் கூடிய வகையில் சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கியவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜி என்ற பெயரை கேட்டதும் நமக்கு உடனடியாக நினைவுக்கு வரும் பெயர் நடிகர் திலகம் தான். அப்படி இந்த பெயர் உருவாக காரணமாக இருந்த பின்னணியை பற்றி தற்போது பார்க்கலாம்.

சிறு வயதிலேயே நடிக்க வேண்டும் என விருப்பத்துடன் இருந்து வந்த சிவாஜி கணேசன், ஒரு நாடக குழுவில் தான் அநாதை என்று பொய் சொல்லி இணைந்து கொண்டார். அதில் மெல்ல மெல்ல தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து இழுத்த சிவாஜி கணேசன், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் அடி எடுத்து வைத்திருந்தார்.

பலரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக முன்னேறும் வரையில் எக்கச்சக்க திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபத்திரங்களில் நடித்து வர, அதன் பின்னர் தான் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடத்தையும் பிடித்திருந்தனர். ஆனால் சிவாஜி கணேசனோ தான் நடித்த முதல் படத்திலேயே நாயகனாக களமிறங்கி நடிப்பில் வேறொரு உயரத்தை தொட்டிருந்தார்.

சிவாஜி வசனம் பேசினாலோ, அல்லது முக பாவனைகளை செய்தாலோ அவரது உடலும் சேர்ந்து அவரது நடிப்புக்கு தாளம் போடும். அந்த வகையில் ரசனையுடன் நடிப்பை செய்து வந்த சிவாஜி கணேசன், அடுத்தடுத்த தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நிறைய நடித்துள்ளார்.

அப்படி இருக்கையில், இவரது பட்ட பெயரான நடிகர் திலகத்திற்கு பின்னால் ஒரு சுவாரஸ்ய பின்னணி ஒளிந்துள்ளது. பேசும் படம் என ஒரு பத்திரிக்கையை சம்பத் குமார் என்பவர் 1960 களில் நடத்தி வந்தார். இவர் சிவாஜிக்கு நண்பராக பராசக்தி படம் வெளியான போது இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் தனது பத்திரிக்கையில் ஒவ்வொரு பிரபலங்களின் ஃபோட்டோவை வெளியிட்டு வந்த சம்பத் குமார், பராசக்தி சிவாஜி கணேசனை இம்மாத நட்சத்திரம் என்றும் குறிப்பிட்டு, வருங்காலத்தில் முன்னணி நடிகராக வருவார் என்றும் புகழ்ந்திருந்தது. இதனை கவனித்த சினிமா ரசிகர்கள் இரண்டு பேர், சிவாஜி கணேசனுக்காக பேசும் படம் பத்திரிக்கை ஒரு விழாவை நடத்தி நடிகர் திலகம் என்ற பட்டத்தை வழங்க வேண்டும் என கடிதம் எழுதி அதற்காக பணத்தையும் சம்பத் குமாருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

இதனைத் தொடர்ந்து, சிவாஜி கணேசனை பற்றி சம்பத் குமார் எழுதிய போதெல்லாம் அவரை நடிகர் திலகம் என்று தான் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தான், கடந்த 1957 ஆம் ஆண்டு வெளியான அம்பிகாபதி என்ற படத்தில் சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் என்ற பட்டத்துடன் டைட்டில் ஒளிபரப்பாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.