சிவாஜியுடன் விஜயகாந்த் நடித்த ஒரே படம்.. கேப்டன் கனவு நிறைவேறியும் கூடவே காத்திருந்த வேதனை!

By Bala Siva

Published:

தமிழ் சினிமாவில் கேப்டன் என அன்பாக அறியப்பட்ட விஜயகாந்த், கடந்த சில தினங்கள் முன்பாக உடல்நல குறைவால் காலமானார். அவரது மறைவு லட்சக்கணக்கான மக்களை உடைந்து போக செய்ய, சென்னையில் ஏராளமான ரசிகர்கள் ஒன்று திரண்டு கேப்டனுக்கு பிரியா விடையை கொடுத்திருந்தனர். நல்ல மனசுடன் இருந்த விஜயகாந்த், தன்னால் முடிந்த வரைக்கும் பல உதவிகளை முன் பின் தெரியாதவர்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் செய்துள்ளார்.

அப்படி இருக்கையில், தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த விஜயகாந்த், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அந்த வகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து விஜயகாந்த் நடித்த திரைப்படம் பற்றி காணலாம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், முத்துராமன்,  பாக்யராஜ், பாரதிராஜா, பாண்டியராஜன், சத்யராஜ், பிரபு  என கிட்டத்தட்ட 3 தலைமுறை நடிகர்கள் அவருடன் நடித்துள்ளனர். அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் வீரபாண்டியன் என்ற ஒரே படத்தில் தான் இணைந்து நடித்துள்ளார்.

இந்த படம் கடந்த 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் சங்கர் கணேஷ் இசையில் உருவான இந்த படத்தில் சிவாஜி கணேசன், விஜயகாந்த், ராதிகா, சுமித்ரா, ஜெய்சங்கர், ராதாரவி, வி கே ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் கதை என்னவென்றால் ஒரு கிராமத்தில் சிவாஜி கணேசன்  தலைவராக இருப்பார். அந்த கிராமத்தில் ஒரு கோயில் இருக்கும். அந்த கோவில் நகைகளை கொள்ளை அடிக்க ஒரு கும்பல் முயற்சி செய்ய, அந்த கும்பலுக்கு அந்த கிராமத்தில் உள்ள சில பஞ்சாயத்து நிர்வாகிகள் ஆதரவாக இருப்பார்கள்.

இந்த நிலையில் கோவில் நகைகளை கொள்ளை அடிக்கும் முயற்சியை விஜயகாந்த் தடுத்து விடுவார். இதனை அடுத்து அடுத்த ஆண்டு கோவில் திருவிழா வரும் வரை அந்த கொள்ளையர்கள் காத்திருப்பார்கள்.

இதற்கிடையில் சிவாஜி கணேசன் சுமித்ராவை திருமணம் செய்ய சம்மதிப்பார். ஆனால் எதிர்பாராத வகையில் அந்த திருமணம் தள்ளிப்போகும். இதனிடையே சிவாஜியின் தங்கை ராதிகாவை விஜயகாந்த் காதலிப்பார். இவ்வாறு கதை சென்று கொண்டிருக்கும் நிலையில், சிவாஜி கணேசன் சுமித்ரா திருமணம் நடந்ததா? விஜயகாந்த் ராதிகா திருமணம் நடந்ததா? கொள்ளையரின் முயற்சியை விஜயகாந்த் முறியடித்தாரா என்பதுதான் கிளைமாக்ஸ்.

முதல் முதலாக சிவாஜி கணேசன் மற்றும் விஜயகாந்த் இணைந்து நடித்த இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் இயக்குனர் கார்த்திக் ரகுநாத் திரைக்கதை சொதப்பலாக இருந்ததால் படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி சங்கர் கணேஷ் பாடல்கள், பின்னணி இசையும் கூட இந்த படத்திற்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.

இந்த படத்தில் மிகப்பெரிய நடிகர்கள் பலர் நடித்திருந்த போதிலும் கதை சரியாக இல்லாததால், காட்சி அமைப்பும் திரைக்கதையும் சரியாக இல்லாததாலும், மக்கள் மனதை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படம் தோல்வி படமாக அமைந்தது.

இருப்பினும் சிவாஜி கணேசனுடன் நடிக்க வேண்டும் என்ற விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறியது. அதற்கு பிறகு சிவாஜி கணேசனுடன் விஜயகாந்த் நடிப்பதற்கு சில வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அவர் பிஸியாக இருந்ததால் அந்த வாய்ப்புகளை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது.